×

ஊதியம் வழங்கக்கோரி தனியார் கல்லூரி சுயநிதிப்பிரிவு பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அருப்புக்கோட்டை, டிச. 11: அருப்புக்கோட்டையில், ஊதியம் வழங்ககோரி, தனியார் கல்லூரி சுயநிதிப் பிரிவு பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் தனியார் கலைக்கல்லூரி உள்ளது. இக்கல்லூரி சுயநிதிபிரிவில் ஆசிரியர்கள், அலுவலர்கள் 101 பேர் பணிபுரிந்து வருகின்றனர். நிர்வாக பிரச்சனையால் நிரந்தர மற்றும் சுயநிதிப்பிரிவு பேராசிரியர்களுக்கு சம்பள வழங்கப்படாமல் இருந்தது. தற்போது இணை இயக்குநர் மூலமாக நிரந்தர பேராசிரியர்களுக்கு நேரடியாக சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால், சுயநிதிபிரிவு பேராசிரியர்களுக்கு கல்லூரி செயலாளர் இல்லாத நிலையில், கடந்த ஓராண்டாக முறையாக ஊதியம்  வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால், நேற்று ஊதியம் வழங்கக் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இது குறித்து பேராசிரியர்கள் கூறுகையில், ‘கல்லூரி சுயநிதிப்பிரிவில் கடந்த மூன்று மாதமாக முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை. சுயநிதிபிரிவு மாணவ, மாணவிகளிடம் பெறப்படும் கல்வி கட்டணம் கல்லூரி செயலாளர் பேரில் உள்ள வங்கிக்கணக்கில் உள்ளது. தற்போது நிர்வாக பிரச்னையால் செயலாளர் இல்லாத காரணத்தால், ஊதியம் வழங்க முடியாத நிலை உள்ளது. இது குறித்து கல்லூரி கல்வி இயக்குநர் மற்றும் மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இது தொடர்பாக கடந்த நான்கு நாட்களாக கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறோம். கல்லூரி செயலாளர் பேரில் இருக்கும் வங்கி கணக்கின் இருப்புத் தொகையை முதல்வருடன் இணைந்து கல்லூரி கல்வி இணை இயக்குநருக்கோ அல்லது முதல்வருடன் இணைந்து கல்லூரியின் மூத்த பேராசிரியர்கள் குழுவினர் பெயரிலோ, மாற்றியமைத்து மாத ஊதியத்தினை தாமதமின்றி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர். இப்போராட்டத்தால் இரண்டு நாட்கள் சுயநிதிபிரிவு மாணவர்களுக்கு வகுப்புகள் இல்லை என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.


Tags :
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு