×

சிவகாசியில் கழிவுநீர் தேங்கும் கிருதுமால் ஓடை

சிவகாசி, டிச. 11: சிவகாசி நகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக அடிப்படை கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படவில்லை. நகரில் உள்ள பெரும்பாலான விடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் கிருதுமால் ஓடை வழியாக சென்று மீனம்பட்டி கண்மாயில் கலக்கிறது. நகரின் முக்கிய கழிவுநீர் ஓடையான கிருதுமால் ஓடை கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இதனால், மழை காலங்களில் வீடுகளுக்குள்ளும், தெருக்களிலும் மழைநீருடன் கழிவுநீரும் பெருக்கெடுத்து ஓடுகிறது. கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கிருதுமால் ஓடை அமைந்துள்ள முஸ்லீம் நடுத்தெரு, டெலிபோன் எக்சேஞ்ச் பகுதியில் தேங்கி கிடந்த கழிவுகளை  நகராட்சி நிர்வாகத்தினர் தூர்வாரினர். ஆனால், ஓடை முழுவதும் தூர்வாரப்படவில்லை. இதனால், மீண்டும் கழிவுநீர் தேங்குகிறது. கிருதுமால் ஓடையை ஆக்கிரமித்து, பலர் வீடுகள், கடைகளை கட்டியுள்ளனர். முஸ்லீம் தெரு அருகே கிருதுமால் ஓடையே தெரியாத அளவுக்கு முட்செடிகள், கோரைப்புற்கள் வளர்ந்துள்ளன. இதனால், கந்தபுரம் தெரு, முஸ்லீம் நடுத்தெரு, சீதக்காதி தெரு, அண்ணா காலனி, காளியம்மன் கோவில் தெரு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளம்போல மாதக்கணக்கில் தேங்கி நிற்கிறது.  

இந்நிலையில், அரசு உதவி பெறும் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளி முன் கிருதுமால் ஓடை கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுவதால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். மழை காலங்களில் மழைநீருடன் கழிவுநீருடன் சேர்ந்து பள்ளி வளாகத்திற்குள் புகுந்து விடுகிறது. இதனால், மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. நகரின் முக்கிய கழிவு நீர் ஓடையான கிருதுமால் ஓடையை தூர்வாராமல் அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். பெரிய மழை பெய்தால் முஸ்லீம் பள்ளி எதிரே குளம் போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. இச்சமயங்களில் பள்ளி மாணவ, மாணவியர் மழைநீரைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது.  எனவே, கிருதுமால் ஓடையை தூர்வாரி, முஸ்லீம் பள்ளி எதிரே மாதக்கணக்கில் தேங்கியிருக்கும் ஓடை கழிவுகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...