×

குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கின்றன அசுத்தமாக காணப்படும் தேனி வாரச்சந்தை

தேனி, டிச.11: தேனி வாரச்சந்தையில் சுகாதாரம் இல்லாத நிலையில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளை வாங்கும் பொதுமக்கள், பணம் கொடுத்து நோய்களையும் சேர்த்தே வாங்குகின்றனர். அந்த அளவிற்கு சந்தை வளாகம் சுகாதாரம் இல்லாமல் இருப்பது தெரிந்தும் நகராட்சி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தேனியில் வாரந்தோறும் சனிக்கிழமை பெரியகுளம் சாலையோரம் நேரு சிலை அருகே உள்ள கவுமாரியம்மன் கோயில் (சந்தை மாரியம்மன்) திடலில் வாரச்சந்தை நடக்கிறது. அன்றைய தினம் குறைந்தபட்சம் 500க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படும். காய்கறி முதல் இரும்பு பொருட்கள், இறைச்சி வகைகள் வரை அத்தனை பொருட்களுக்கும் இங்கு கிடைக்கும்.பொள்ளாச்சிக்கு அடுத்து மாநிலத்தின் 2வது பெரிய சந்தையாக தேனி சந்தை உள்ளது. இந்த சந்தை இயங்கும் இடம் தான் தற்போது சுகாதாரம் இல்லாமல் இருக்கிறது. சனிக்கிழமை மட்டுமே சந்தை நடக்கிறது. மற்ற ஆறு நாட்களும் உலர் கழிப்பிடமாகவும், குப்பை கொட்டும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவும் மழைக்காலங்களில் சகதியும், கழிவுகளும் கலந்து மிகவும் அருவறுப்பான சூழலில் இந்த இடம் காணப்படுகிறது.இந்தக் கழிவுகளை சுத்தப்படுத்தாமல் வெள்ளிக்கிழமை இரவே வியாபாரிகள் அதன் மீது அப்படியே சாக்கினை விரித்து காய்கறிகள், பலசரக்கு பொருட்கள் என அத்தனையும் கொட்டி வைத்து விற்பனை செய்கின்றனர். ஒரே நாளில் பல கோடி ரூபாய்க்கு விற்பனை நடக்கும்.

இந்த சந்தை வளாகத்தை தங்கள் பொறுப்பில் ஒப்படைத்தால் சுத்தம் செய்து பரமாரிக்க தயாராக இருக்கிறோம் என வாரச்சந்தை வியாபாரிகளும் பலமுறை நகராட்சியிடமும், இந்த சமய அறநிலையத்துறையிடமும் முறையிட்டு பார்த்தனர். ஆனால், எந்த பலனும் இல்லை. இதுகுறித்து நகராட்சியிடம் கேட்ட போது, `` நாங்கள் சந்தை நடத்த இந்த இடத்தை குத்தகைக்கு பிடித்து அதற்கான வாடகை செலுத்தி வருகிறோம். நாங்கள் இதனை சுத்தமாக பராமரிக்க வேண்டுமானால் இந்த இடத்தை எங்களிடம் இந்து சமய அறநிலையத்துறை ஒப்படைக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஒப்படைக்க மறுக்கின்றனர். அவர்கள் பராமரிப்பதும் இல்லை. இதனால் அந்த வளாகம் சுகாதாரம் இன்றி இருப்பதை எங்களால் தடுக்க முடியவில்லை’’ என்றனர்.கோயில் அறங்காவலர் சுப்புராஜ் கூறுகையில், ``அல்லிநகரம் கிராம கமிட்டிக்கு சொந்தமான இடத்தை நாங்கள் இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைத்துள்ளோம். நகராட்சி அவர்களிடம் இருந்து சந்தை நடத்த லீசுக்கு எடுத்துள்ளது. நகராட்சி நிர்வாகம் 27 லட்சம் ரூபாய் வசூலிக்கிறது. அறநிலையத்துறைக்கு 2 லட்சம் ரூபாய் தான் வழங்குகிறது. சந்தை வளாகத்தை துப்புரவு செய்யும் பணியாளர்களுக்கு கிராமக்கமிட்டியும், அறங்காவலர்களும் சொந்த பணத்தை அவ்வப்போது கொடுக்கின்றனர். அரசு இடத்தை நகராட்சிக்கு தாரை வார்க்க முடியாது. இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் இந்த இடத்தை பார்வையிட வருகிறார். அவரிடம் இந்த பிரச்னைகளை முன்வைத்து நாங்கள் ஒரு தீர்வு காண்போம்’’ என்று கூறினார்.




Tags : Theni Weekend ,
× RELATED தாகம் தீர்க்கும் பானங்கள் தரமானதா?