×

ரூ.15 கோடியில் சாலை சீரமைப்பு பணிகள் துவக்கம்

தேனி, டிச.11: மாநில நெடுஞ்சாலைத் துறையின் தேனி உட்கோட்ட பகுதியில் ரூ.15 கோடி செலவில் சாலை சீரமைப்பு பணிகள் துவங்கியுள்ளது.தேனி மாவட்டத்தில் சாலைகள் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, ஊரக சாலைகள் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் மாநில நெடுஞ்சாலைத் துறை மூலம் மாவட்ட முக்கிய சாலைகள், மாவட்ட இதர சாலைகள், கிராம இணைப்பு சாலைகள் பராமரிக்கப்படுகிறது. இச்சாலைகளை பராமரிக்க தேனி மாவட்ட கோட்டத்தின் கீழ் தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, உத்தமபாளையம் ஆகிய ஐந்து உட்கோட்டங்கள் உள்ளன. தேனி மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. இம்மழையால் ஆறுகள், ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக தேனி மாவட்டத்தில் கண்மாய்கள், ஊரணிகள், அணைகள் நிரம்பியுள்ளன. மழையின் காரணமாக நீர்நிலைகள் அதிகரித்திருந்தாலும், சாலைப் போக்குவரத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலைகளை பொறுத்தவரை தேனி மாவட்டத்தில் 3.5 மீட்டர் அகலசாலைகள், 5.5 மீட்டர் அகல சாலைகள், 7 மீட்டர் அகல சாலைகள் மற்றும் 10 மீட்டர் அகல சாலைகள் உள்ளன. இதில் பல சாலைகள் மழையால் சேதமடைந்து பள்ளங்களாகி உள்ளன. இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சேதமடைந்துள்ள சாலைகள், கடந்த 5 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத சாலைகள், சிமெண்டு குழாய் பாலங்கள் குறித்து கணக்கெடுத்தனர். இதன்படி, தேனி உட்கோட்டத்தில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு இதற்கான டெண்டர் விடப்பட்டது. இதனையடுத்து, தற்போது தேனி உட்கோட்டத்தில் ரூ.15 கோடி செலவில் சாலைகள் சீரமைப்பு பணிகள் துவங்கி நடந்து வருகிறது.மாநில நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை

Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு