×

தேவாரம் மலையடிவாரத்தில் காட்டு யானைகளை விரட்டுவதில் சிக்கல்

தேவாரம், டிச.11: தேவாரம் மலையடிவாரத்தில் யானைகளை விரட்ட கூடுதலாக வன ஊழியர்கள் நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.தேவாரம் மலையடிவாரம் இயற்கை எழில்கொஞ்சும் மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது. அதிகமான அளவில் தென்னை, காய்கறிகள், கப்பை பயிரிடப்பட்டுள்ளன. தமிழக-கேரளா வனக்காடுகளின் வழியே இடம்பெயரக்கூடிய காட்டுயானைகள் அடிக்கடி நன்றாக விளைந்துள்ள தென்னை, காய்கறி, கப்பை, சோளம் உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகி வருகிறது. மழையே அதிகம்இல்லாத தேவாரம் பகுதியில் அதிர்ஷ்டவசமாக பெய்யக்கூடிய மழையினால் விளையக்கூடிய பயிர்களை அறுவடை செய்வோம் என்ற நம்பிக்கையுடன் விவசாயிகள் இருக்கும்போது திடீரென காடுகளில் இருந்து நிலப்பகுதிகளுக்குள் நுழையும் காட்டுயானைகள் எல்லா பயிர்களையும் ஒரே இரவில் துவம்சம் செய்துவிட்டு சாவகாசமாக காடுகளுக்குள் நுழைந்து கொள்கின்றன. இதனால் விவசாயிகள் வேதனையின் உச்சத்தில் உள்ளனர். ரூ.பல லட்சம் மதிப்பிலான விளைபயிர்கள் நாசம் அடைந்துள்ளன.கடந்த 15 நாட்களில் கேரளா-தமிழக வனப்பகுதிகளில் இருந்து இறங்ககூடிய காட்டு யானைகள் அதிகளவில் சேதப்படுத்தி வருகின்றன. இரவில் வனத்துறை அதிகாரிகளை நோக்கி விவசாயிகள் நேரடியாக வந்து புகார் செய்கின்றனர். ஆனால் விவசாயிகள் சொல்லக்கூடிய புகார்களை காதில் வாங்கிக் கொள்ளாத வனத்துறையினர் பெயரளவில் யானைகளை விரட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறி பாதிக்கப்பட்ட விவசாயிகளிடமே பட்டாசுகளை வாங்கி கொடுக்க சொல்லி தூரமான இடங்களில் வெடிசப்தத்தை எழுப்புகின்றனர்.

குறிப்பாக சபரிமலை சீசன் காலங்களில் மட்டும் பிரச்சனை அதிகமாகிறது. வன ஊழியர்கள் அதிகமானஅளவில் இருந்தால் மட்டுமே இதனை காடுகளுக்குள் விரட்டமுடியும். கூட்டமாக உள்ள யானைகள் சில அடி தூரம் மட்டுமே சென்றுவிட்டு மீண்டும் நிலப்பகுதிகளுக்கு வந்து விளைந்த பயிர்களை துவம்சம் செய்கின்றன. குறிப்பாக தென்னை மரங்களை அடித்து துவம்சம் செய்யும்போதெல்லாம் 5 வருட, 10 வருட மரங்கள் எல்லாம் அடியோடு பிடுங்கி எறியப்படுகின்றன. இந்த மரங்களை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். இந்நிலையில் ஒற்றையாக திரியக்கூடிய மக்னா யானையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. உத்தமபாளையம் வனத்துறையினரின் இத்தகைய பொறுப்பற்ற நடவடிக்கைகளை கண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோம்பையில் உள்ள வனத்துறை அலுவலகத்திற்கு சென்றாலும் அங்கு அதிகாரிகள் பொறுப்பான பதிலை சொல்லாமல் அலைக்கழிக்கின்றனர். இதனால் தேவாரம் விவசாயிகள் தினமும் துயரப்படுகின்றனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தேவாரம் மலையடிவாரத்தை ஒட்டி உள்ள நிலங்களில் யானைகள் கூட்டமாக நிற்கின்றன. இந்த தகவல்களை சொன்னால்கூட வனத்துறை அதிகாரிகள் வருவதில்லை. பயிர்கள் நாசம் ஆனது பற்றி எத்தனையோ முறை கொடுத்த நிவாரண மனுக்களுக்கு இதுவரை எந்த நிவாரணமும் கிடைத்ததாக தெரியவில்லை. இந்த நிலை நீடித்தால் விவசாயிகள் ஒட்டுமொத்தமாக போராட்டங்கள் நடத்துவர். சபரிமலை சீசன் காலங்களில் மட்டும் இடம்பெயரக்கூடிய யானைகளை கட்டுப்படுத்திடவும், வனத்திற்குள் விரட்டவும் கூடுதல் வனப்பணியாளர்களை நியமிக்க உடனடியாக மாவட்ட வனத்துறை முன்வரவேண்டும் என்றனர்.

Tags : mountain range ,
× RELATED குன்னூர் – மேட்டுப்பாளையம்...