×

தொழில் பங்குதாரர்கள் மோசடி கலெக்டர் கார் முன் அமர்ந்து பெண் தர்ணா போராட்டம்

தேனி, டிச.11: தேனி நகரில் பாரஸ்ட் ரோடு 6 வது தெருவில் குடியிருப்பவர் ஜெயந்தி(40). இவர் தனது இரு குழந்தைகளுடன் நேற்று தேனி கலெக்டர் அலுவலகம் வந்தார். போர்டிகோவில் கலெக்டர் கார் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையறிந்த போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி, அப்பெண் கொண்டு வந்த கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.ஜெயந்தி அளித்துள்ள மனுவில், தேனி பகவதி அம்மன் கோயில் தெருவில் உள்ள பழனிசெட்டிபட்டியை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கு சொந்தமான டிரஸ்டில் நான் கணக்காளராக பணிபுரிந்து வந்தேன். அப்போது, அவருடைய நண்பரான தேனி ஜிஎச் ரோட்டை சேர்ந்த அந்தோனிராஜ் ஆகியோர் சேர்ந்து கட்டிட காண்டிராக்ட் தொழில் செய்து வந்தனர்.

இவ்விருவரும் என்னிடம், நீ பட்டப்படிப்பு படித்திருப்பதால் மாவட்ட தொழில் மையம் மூலம் ஹாலோ பிளாக் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க கடன் பெற்றால் அதில் மூவரும் சேர்ந்து ஹாலோ பிளாக் கற்கள் உற்பத்தி செய்து வருகிற லாபத்தில் பங்கு பிரிக்கலாம் என்றனர். இதனைநம்பி மாவட்ட தொழில் மையம் மூலமாக வங்கியில் ரூ.10 லட்சம் கடன் பெற்று வைகை அணை செல்லும் சாலையில் ஹாலோ பிளாக் உற்பத்தி செய்யும் தொழில் செய்வதற்னாக மிஷின் கொள்முதல் செய்து உற்பத்தி செய்து வந்தேன். மூவரும் லாபத்தை ஆண்டின் இறுதியில் கணக்கு பார்த்து பிரித்துக் கொள்ளலாம்; மாதந்தோறும் வரும் பணத்தில் வங்கிக்கு செலுத்த வேண்டிய தவணையை தவறாமல் செலுத்தலாம் என்றனர். ஆனால் லாபத்தொகையை எனக்கு தராமல் இருந்தனர். இதில் வந்த லாபத் தொகை முத்துக்குமாரும், அந்தோனிராஜூம் சேர்ந்து மோசடி செய்து விட்டனர். தற்போது, ஹாலோ பிளாக் உற்பத்தி செய்த இடத்தை வாடகை ஒப்பந்தத்தையும் ரத்து செய்து விட்டனர். இதனால் ஹாலோ பிளாக் தொழிலையும் செய்யமுடியவில்லை. வங்கியில் வாங்கிய கடனையும் திருப்ப செலுத்த முடியவில்லை. எனவே, மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கு தரவேண்டிய பணத்தை பெற்றுத் தரவேண்டும் என தெரிவித்திருந்தார்.


Tags : Industry Partners Cheating Woman Darna ,
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு