தொண்டியை அடுத்த முள்ளிமுனையில் அரசு பள்ளிக்கூடம் அருகே அறுந்து விழுந்த மின் கம்பி உயிர் தப்பிய மாணவர்கள்

தொண்டி, டிச. 11: தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை அரசு பள்ளி அருகே உள்ள மின் கம்பத்திலிருந்து மின் கம்பி திடீரென அறுந்து விழுந்தது. பள்ளியில் பாட வேளை நடந்துகொண்டிருந்ததால் மாணவர்கள் ஆபத்திலிருந்து உயிர் தப்பியதாக பொதுமக்கள் தெரிவித்தனர். தொண்டி அருகே உள்ள முள்ளிமுனை கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி அருகே டிரான்ஸ்பார்மர் உள்ளது. இது மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்ப்படுத்தும் என்பதால் மாற்ற வேண்டும் என பலமுறை பகுதி மக்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால் எவ்வித பயனும் இல்லை. இந்நிலையில் நேற்று பாட வேளையின் போது அருகில் உள்ள மின் கம்பத்திலிருந்து மின்கம்பி திடீரென அறுந்து விழுந்துள்ளது. கம்பி அறுந்து விழுந்த இடத்தில் தான் மாணவர்கள் அதிகம் நடமாடுவார்கள். அதிர்ஷ்டவசமாக நேற்று மாணவர்கள் வகுப்பறையில் இருந்ததால் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறவில்லை. எனவே பள்ளியின் அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரை இடம் மாற்ற வேண்டும் என்றும், பள்ளி வளாகத்தின் உள்ளே செல்லும் மின் கம்பிகளை மாற்றுப்பாதையில் கொண்டுசெல்ல மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பள்ளி மேலாண்மை குழு தலைவி லதா கூறியதாவது, ‘‘பள்ளியின்அருகில் இருக்கும் டிரான்ஸ்பார்மர் அடிக்கடி வெடிப்பதால் தீப்பொறி பறந்து வருகிறது. மேலும் பள்ளியின் வளாகத்தில் இருபுறமும் மின் கம்பி செல்கிறது. இன்று அறுந்து விழுந்த மின் கம்பி பள்ளி சுவற்றின் அருகில் விழுந்து கிடந்தது. பாடவேளை நடந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததால் மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். எனவே மின் வாரிய அதிகாரிகள் உடனடியாக டிரான்ஸ்பார்மரை வேறு இடத்திற்கு மாற்றவும், பள்ளி வளாகத்திற்குள் செல்லும் மின் கம்பிகளை மாற்று வழியிலும் கொண்டு செல்ல வேண்டும் அப்போதுதான் பெரும் விபத்து தவிர்க்கப்படும்’’ என்றார்.

Tags : Government School ,Thondai ,
× RELATED மார்த்தாண்டம் அரசு பள்ளியில்...