×

வேளாண் அதிகாரிகள் யோசனை நெற் பயிரில் புகையான் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம்

காரைக்குடி, டிச. 11: புகையான் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து வேளாண் அதிகாரிகள் ஆலோனை தெரிவித்துள்ளனர். இது குறித்து வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, பகல் நேர வெப்பம் குறைந்து மப்பும் மந்தாரத்துடன் கூடிய குளிர்ச்சியான சூழ்நிலையும், அவ்வப்போது மிகக்குறைவான அளவில் தூறலும், இரவில் பனிப்பொழிவும் காணப்படுவதால் கதிர் வெளிவரும் தருணம் முதல் கதிர் வெளிவந்து பூப்பூக்கும் தருணத்தில் நெற்பயிர்களில் இப்பூச்சிகளின் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. புகையான் பூச்சிகள் நெற்பயிர்களின் தூர்களின் அடிப்பகுதியில் நீர்மட்டத்திற்கு மேல் இருந்து கொண்டு பயிரின் சாற்றை உறிஞ்சுவதால் பயிர்கள் சிவந்து இலைகள் மற்றும் தூர்கள் முழுவதுமாக காய்ந்துவிடும். கதிர்களில் பால்பிடித்து மாவுச்சத்து சேர்க்கப்படாமலேயே மணிகள் முற்றிலுமாக பதராக மாறிவிடும். தாக்குதல் மிகவும் அதிகமானால் பயிர்கள் கட்டி கட்டியாக காய்ந்து எரிந்ததுபோல் காணப்படும். முதலில் வயலில் இருந்து தண்ணீரை வடிக்க வேண்டும். முதிர்ந்த பயிராக இருப்பின் பட்டம் பிரிந்து சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டத்தை அதிகப்படுத்த வேண்டும்.

வயலில் எப்போதும் நீர் மறைய நீர் கட்டி வர வேண்டும். ஏக்கருக்கு பரிந்துரைக்கப்படும் மேலுரமாக 22 கிலோ யூரியா உரத்திற்கு மேல் எக்காரணம் கொண்டும் இடக்கூடாது. புகையான் நடமாட்டம் அதிகமாக தென்படும் இடங்களில் தழைச்சத்து கொடுக்கவல்ல யூரியா உரத்தை மேலுரமாக இடாமல் இருப்பதே நல்லது. மேலும் புகையான் பூச்சிகளின் மறுபெருக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ரசாயன பூச்சிக்கொல்லிகளை கண்டிப்பாக தெளிக்ககூடாது. புகையான் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு அசாடிராக்டின் 500மிலி அல்லது இமிடாகுளேபிரிட் 100 மிலி அல்லது அசிபேட் 250 கிராம் அல்லது தயாமிக்தாஸின் 100 கிராம் இவற்றில் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லி மருந்தினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தூரின் அடிப்பகுதியில் நன்கு நனையும் படி பூ நாசில் பயன்படுத்தி தெளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Tags : agriculture authorities ,pest attack ,
× RELATED வேளாண் சட்டம் நிறுத்திவைப்பு: மத்திய...