×

கீழக்கரையில் புதிய பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் பேருந்துகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கீழக்கரை, டிச.11: கீழக்கரை வழியாக பல்வேறு ஊர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழக்கரை நகராட்சியில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர், இவர்களில் பெரும்பாலானவர்கள் ராமநாதபுரம் மற்றும் மதுரைக்கு மருத்துவமனை மற்றும் பணி நிமித்தமாக சென்று வருகின்றனர். இந்நிலையில் ராமநாதபுரத்திலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பல ஊர்களுக்கு செல்லும் பேரூந்துகளும், வெளியூரிலிருந்து ஏர்வாடி தர்ஹா செல்லும் பேருந்துகளும் ஏர்வாடி முக்கு ரோட்டிலேயே பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர். இதனால் ஆட்டோவிற்கு ரூபாய் 50 முதல் 60 வரை கொடுத்து புதிய பஸ் நிலையம் வரவேண்டிய நிலை உள்ளது. எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் கீழக்கரை வழியாக பல்வேறு ஊர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் புதிய பஸ் நிலையம் வரை வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து நுகர்வோர் நலச்சங்க செயலாளர் செய்யது இபுராகிம் கூறுகையில், கீழக்கரையில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் ராமநாதபுரம் மற்றும் மதுரையில் பல்வேறு கடைகளில் கூலி வேலை செய்பவர்கள். பெண்களும் கை குழந்தைகளுடன் ராமநாதபுரம் மற்றும் மதுரை மருத்துவமனைக்கு சென்றுவிட்டு நடுஇரவில் வருவார்கள். இவர்களை கீழக்கரை ஊரிலிருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஏர்வாடி முக்கு ரோட்டில் இறக்கி செல்வதால் தனியாக நடந்து வருவதற்கு அச்சப்பட்டு ஆட்டோவை வாடகைக்கு எடுத்து வரவேண்டியுள்ளது. மேலும் பகல் வேலையிலும் சில பேருந்துகள் ஊருக்குள் வராமல் சென்று விடுகிறது. இதுகுறித்து போக்குவரத்துக்கழக அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மாவட்ட கலெக்டர் இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு பகல் மற்றும் இரவு நேரங்களிலும் கீழக்கரை வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் ஊருக்குள் உள்ள புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : bus station ,
× RELATED பொன்னமராவதியில் இருந்து இரவு 10...