×

அரசு மருத்துவமனை வளாகத்தில் பாதையில் வாகனங்கள் நிறுத்துவதால் நெரிசல்

மதுரை, டிச. 11: மதுரை அரசு மருத்துவமனையில் பாதையில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்திக்கொள்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும், டாக்டர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மதுரை அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள், இவர்களின் உறவினர்கள், மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் செவிலியர்கள் என தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இதனால் மருத்துவமனையில் கூட்டம் அதிகமாக இருக்கும். சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், ஒரு வார்டிலிருந்து மற்றொரு வார்டுக்கு ஸ்ட்ரெட்சரில்   நோயாளிகளை கொண்டு செல்லும் பணியாளர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்குச் செல்லும் மருத்துவமனை ஊழியர்கள் என காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரை மருத்துவமனையில் கூட்டம் நீடிக்கும். மேலும் இவர்களில் 80 சதவீதம் பேர் டூவீலர், கார், ஆட்டோ போன்ற வாகனங்களில் வருவதால், மருத்துவமனையில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவமனையின் முக்கிய நுழைவு வாயிலிலிருந்து பிணவறை வரையிலும், பாதையின் இருபுறங்களிலும், ஆம்புலன்ஸ்கள், கார்கள், ஆட்டோக்கள் மற்றும் டூவீலர்களை தங்கள் இஷ்டம் போல் நிறுத்திக்கொள்கின்றனர்.

இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.  அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் பாதிக்கப்படும் அளவிற்கு மருத்துவமனைக்குள் வாகன நெரிசல் ஏற்படக்கூடாது என்பதற்காக, டாக்டர்களின் கார்கள் உள்ளிட்ட தனியார் கார்கள், ஆட்டோக்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களை நிறுத்த பிணவறை அருகே இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் டாக்டர்களில் சிலர் மட்டுமே அங்கு வாகனங்களை நிறுத்துகின்றனர். மற்றவர்கள்  மருத்துவமனை வளாகத்தில், ஆடிட்டோரியம், குழந்தைகள் வார்டு முதல் கைதிகள் வார்டு வரை, சமையல் கூடப்பகுதி என ஆங்காங்கே நிறுத்திக்கொள்கின்றனர். இதனால் அந்த இடம் தற்போது தனியார் கார் பார்க்கிங்காக மாறிவிட்டது.  
 
அரசு மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள நெரிசல் குறித்து மருத்துவப் பணியாளர்கள் கூறுகையில், ``அரசு மருத்துவமனை வளாக பகுதியில் கடும் நெரிசல் ஏற்படுவதோடு,  மருத்துவமனை பணியாளர்கள், தங்களது டூவீலர்களை நிறுத்த இடம் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால், தேவையற்ற பிரச்சனைகளும் ஏற்படுகிறது. எனவே மருத்துவமனைக்குள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில், ஒழுங்கற்று வாகனங்களை நிறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க, காவல்துறை மற்றும் தனியார் செக்யூரிட்டி பணியாளர்களை டீன் வலியுறுத்த வேண்டும்’’ என்றனர்.

Tags : road ,complex ,Government Hospital ,
× RELATED மரப்பாலம் அருகே அந்தரத்தில் தொங்கும் சாலை: போக்குவரத்து பாதிப்பு