×

வேட்புமனு தாக்கலுக்கு விதிமீறிய ஊர்வலத்தால் போக்குவரத்து பாதிப்பு

மதுரை, டிச. 11: வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் ஊர்வலமாக தேர்தல் விதிமீறி வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், இதற்கு மாநில தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி துவங்கியது. ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு மட்டும் அதிகளவில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக நடந்த வேட்பு மனு தாக்கலில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய, தங்களது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோருடன் சேர்ந்து ஊரில் இருந்து கார்கள், டூவீலரில் ஊர்வலமாக வாகன விதியை மீறி, கோஷம் போட்டவாறும், அச்சுறுத்தலுடன் வருகின்றனர். அவர்கள் வரும் வழியில் ரோடுகளில் வாகனங்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு செய்து கொண்டு ஒன்றிய அலுவலகத்திற்கு வருகின்றனர்.

அவர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் நடைபெறும் ஒன்றிய அலுவலகத்தில் நுழைய முயற்சி செய்கின்றனர். அங்கு பாதுகாப்புக்கு இருக்கும் போலீசார் வேட்பாளருடன் 5 பேர் மட்டும் செல்ல வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். ஆனால் ஆதரவாளர்கள் அதை கேட்பது இல்லை. இதனால், போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்படுகிறது. வேட்பாளர் சிலர் அதிமுகவினராக இருப்பதால், போலீசார் அவர்களை ஏதும் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். மேலும்  ஒன்றிய அலுவலகத்தில் வேட்பாளர்களை விட ஆதரவாளர்கள் கூட்டம் அலைமோதியது. மதுரை கிழக்கு, மேற்கு ஒன்றியத்தில் அதிகமான கூட்டம் இருந்ததால், போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் அலுவலகத்திற்குள் உள்ளே செல்ல முயற்சிக்கின்றனர்.  

இதுகுறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் எவ்வாறு வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஒரு வரையறை உள்ளது. ஊர்வலம் செல்ல தடை உள்ளது. 300 மீட்டருக்கு மேல் கார் அனுமதிக்க முடியாது. 3 கார்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். வேட்பு மனு தாக்கலில் 5 பேர் மட்டுமே அறைக்குள் செல்ல முடியும் என பல்வேறு விதிமுறைகள் உள்ளது. அதை மீறுவோர் மீது போலீசார் தாங்களாவே வழக்கு பதிவு செய்துவிடுவோம். ஆனால், உள்ளாட்சி தேர்தலில் இதுபோன்ற கட்டுப்பாடுகள் இல்லை. ஆதரவாளர்களுடன் ஆட்டம்பாட்டத்துடன் வருகின்றனர். இதனால் போக்குவரத்து பாதிப்பும், பொதுமக்களும் பாதிக்கின்றனர். அனைவரும் அலுவலகத்திற்குள் செல்ல முயற்சி செய்கின்றனர். மேலும் வரும் நாட்களில் அரசியல் கட்சியினரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தால் கூட்டம் அதிகமாகும். இதனை தடுக்க மத்திய தேர்தல் ஆணையம் போல், மாநில தேர்தல் ஆணையமும், வேட்பு மனு தாக்கலுக்கு தற்போது கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்’’
என்றார்.

Tags : procession ,
× RELATED மேலூர் அருகே வல்லடிகாரர் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு