×

நிலக்கோட்டையில் பத்திரம் தட்டுப்பாட்டால் வேட்பாளர்கள் திண்டாட்டம்

வத்தலக்குண்டு, டிச. 11: நிலக்கோட்டையில் ரூ.20 பத்திரம் தட்டுப்பாட்டால் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்ய முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் டிச.27, 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் துவங்கியது. ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர்கள் என அனைத்து பதவிகளுக்கும் அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் மனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
இதில் ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்களுக்கு வேட்பு மனு தாக்கலின் போது ரூ.20 பத்திரத்தில் தங்களின் சொத்து மதிப்பு மற்றும் சுயவிபர குறிப்புகள் அடங்கிய பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்பது வழக்கம். ஆனால் தற்போது வார்டு உறுப்பினர்களும் ரூ.20 பத்திரத்தில் சொத்து மதிப்பு, சுயவிபர குறிப்புகள் அடங்கிய பத்திரத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் நிலக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ.20 பத்திரத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தேவை அதிகமாக இருப்பதால் சில இடங்களில் பத்திரத்தின் விலை அதிகமாக விற்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் நிலக்கோட்டை பகுதி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் திண்டாடி வருகின்றனர். இதுகுறித்து சமூகஆர்வலர் ஜோசப் கூறுகையில், ‘ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்ய குறைந்த நாட்களே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலக்கோட்டையில் 20 ரூபாய் பத்திரம் தட்டுப்பாட்டால் வேட்புமனு தாக்கல் செய்வது தாமதமாகிறது. எனவே உடனடியாக அரசு 20 ரூபாய் பத்திரம் தட்டுப்பாட்டை நீக்கி தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்’ என்றார்.

Tags : Nilakkottai ,
× RELATED நிலக்கோட்டை தொகுதி மவிகவுக்கு...