×

மன்னார்குடி -பெங்களூர் இடையே பயணிகள் ரயில் இயக்க வேண்டும்

மன்னார்குடி, டிச. 11: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள ரயில் நிலையம் பொது மக் களின் 40 ஆண்டு கால போராட்டங்களுக்கு பிறகு கடந்த 2011ம் ஆண்டு அப்போதைய ரயில்வே நிலைக் குழு தலைவராக இருந்த திமுகவை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் டிஆர் பாலு பெரும் முயற்சியால் கொண்டு வரப்பட்டது .மன்னார்குடி ரயில்வே நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, திருப்பதி, ஜெய்பூர், மானாமதுரை, மயிலாடுதுறை போன்ற முக்கிய நகரங்களுக்கு 6 க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் இந்த ரயில் சேவைகளை ஆயிரக்கணக்கான மக்கள் பயன் படுத்துகின்றனர்.

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதி ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றும் இளம் வயதினர்கள், எம்.பி.ஏ, மற்றும் பல தொழில்நுட்ப படிப்பு படிக்கும் மாணவர்கள், மலிவு விலையில் பைகள், துணிமணிகள், உபகரணங்கள் பொம்மைகள், எலக்டாரானிக் பொருட்கள் வாங்கி விற்கும் சிறுகுறு வியாபாரிகள், கர்நாடகா வாழ்தமிழர்களின் உறவினர்கள் என பலதரப்பட்ட மக்கள் தஞ்சை, திருவாரூர், நாகை போன்ற டெல்டா மாவட்டங்களில் இருந்தும், திருச்சி, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் பெங்களூரு சென்று வருகிறார்கள். இவர்கள் சென்று வர மயிலாடுதுறையில் இருந்து (வ.எண் 16231) கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி வழியாக மைசூர் வரை செல்லும் ஒரே ஒரு விரைவு ரயில் மட்டுமே தற்போது இயங்கி வருகிறது. இந்த ரயிலை தினம் தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் நம்பி உள்ளனர். இந்த ரயில் முன் பதிவு டிக்கெட் கிடைப்பது அரிது. எனவே மன்னார்குடியில் இருந்து பெங்களூருக்கு ஒரு பயணிகள் ரயிலை தினசரி இயக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ரயில் உபயோகிப்பாளர் நலச்சங்க தலைவர் ஹரேஷ் கூறு கையில்:  மயிலாடுதுறையில் இருந்து செல்லும் மைசூர் விரைவு ரயிலில் பயணிகள் செல்ல முன்பதிவு கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாக உள்ளது. கூடுதல் கட்டணத்துடன் கூடிய பிரீமியம் தட்கல் டிக்கெட்டுகள் கூட நொடிப் பொழுதில் தீர்ந்து விடுகிறது. இதனால் திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்டங்களில் இருந்து பெங்களூரு செல்லும் பயணிகள் இடம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
மைசூர் விரைவு ரயிலை தவிர இரண்டு வாராந்திர ரயில்கள் மட்டுமே பெங்களூரு வழியாக செல்கிறது. திருச்சியில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் கங்காநகர் வரை செல்லும் மூன்றாம் வகுப்பு குளிர்சாதன பெட்டிகள் மட்டுமே கொண்ட ஹம்சாபர் ரயில் (வ. எண் 22498), செவ்வாய் கிழமை தோறும் இரவிலும் ஒடும் வேளாங்கண்ணியில் புறப்பட்டு கோவா வரை செல்லும் வாஸ்கோ விரைவு ரயில் (வ.எண் 17316) . இந்த ரயில்கள் பனாசாவாடி வழியாக தான் செல்லும்.ஆனால் பெங்களுருவில் உள்ள பிரதான கே.எஸ்.ஆர் சந்திப்பு செல்லாது. எனவே திருவாரூர், தஞ்சை, நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பயணிகளின் நலன் கருதி மன்னார்குடியில் இருந்து பெங்களூருக்கு இரவு நேர தினசரி பயணிகள் ரயிலை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

திருவாரூர்- காரைக்குடி ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க கூட்டமைப்பு செயலாளர் விவேகானந்தன் கூறுகையில்: வாராந்திர தொலைதூர ரயில்களில் இடைப்பட்ட ஊர்களுக்கான (ப்பூல்டு) கோட்டா ஒதுக்கீட்டில் மட்டுமே முன்பதிவு ரயில்வே வழங்குகிறது. இதனால் மிகக் குறைந்த முன்பதிவு சீட்டுகள் மட்டுமே கிடைக்கிறது. தினசரி மயிலாடு துறையில் இருந்து செல்லும் மைசூர் ரயிலில் 15 முன்பதிவு பெட்டிகள் மட்டுமே உள்ளது. கூடுதல் முன்பதிவு பெட்டிகளை உடனடியாக ரயில்வே இணைக்க வேண்டும். மேலும் இப்பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வாக மேலும் ஒரு விரைவு ரயில் மன்னார்குடியில் இருந்து பெங்களூருவிற்கு இயக்க வேண்டும். என கூறினார்.

இதுகுறித்து மன்னார்குடியை சேர்ந்த ரயில்பயணி மகேந்திரன் கூறுகையில்:  மைசூர் விரைவு ரயிலில் முன் பதிவில்லாத பெட்டிகளில் தஞ்சாவூரில் கூட ஏற இடம் கிடைக்காது. பெங்களூர் பயணம் என்பது நடப்பில் எளிதானது அல்ல. சுமார் 500 கி.மீ தூரத்திற்கு மேல் பயணிக்க வேண்டும். ஆம்னி பேரூந்துகளில் கட்டணம் மிக அதிகம் என்பதால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் செல்ல வழியில்லை. எனவே பயணிகள் , வர்த்தகர்கள், உயர்கல்வி மாணவர்கள் நலன் கருதி மன்னார்குடியில் இருந்து பெங்களூருக்கு இரவு நேர தினசரி பயணிகள் ரயில் ஒன்றை இயக்க வேண்டும். இந்த ரயில் இயக்கப்பட்டால் திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும்.

இது குறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் மாநில துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் கூறுகையில்:  நடப்பு மற்றும் வரும் இரண்டு நிதியாண்டுகளில் கூடுதலாக ஆயிரம் ரயில்கள் இயக்கும் அளவிற்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகை பெட்டிகள் உற்பத்திக்கு ரயில்வே திட்டமிட்டு இருக்கிறது. அதற்கான உற்பத்தி அட்டவனையை வாரியம் ரயில்வே உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு வழங்கி இருக்கிறது. கூடுதலாக மேலும் 5 ஆயிரம் பெட்டிகள் தயாரிக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே மன்னார்குடி பெங்களூரு இடையே பயணிகள் ரயில் இயக்குவதற்கு வாய்ப்புகள் அதிகம்.இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது என கூறினார்.

Tags : Mannargudi ,Bangalore ,
× RELATED ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த...