×

கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு

கடையநல்லூர், டிச.11: கடையநல்லூரில் அரசு மருத்துவமனை, கருப்பாநதி அணைக்கட்டு மற்றும் கலைமான்நகர் பளியர் இன குடியிருப்புகளில் நேற்று கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தென்காசி மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் அருண்சுந்தர் தயாளன்  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்று கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த ஆண் மற்றும் பெண் நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்து கேட்டறிந்தார். நோயாளிகள் இன்சுலின் உள்ளிட்ட மருந்து மாத்திரைகள் குறைவாக கிடைப்பதாக கூறினர். அதனை தொடர்ந்து கிருஷ்ணாபுரம் அரசு ஆரம்ப சுகதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் கருப்பாநதி அணைக்கட்டு அருகில் உள்ள கலைமான் நகர் பளியர் இன மக்கள் வசிக்கு குடியிருப்புகளை பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த மக்கள் நாங்கள் வசிக்கும் குடியிருப்புகள் அனைத்து பழுதடைந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். வேலைவாய்ப்புகள் வழங்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள முதியோர் உதவி தொகையை திரும்ப வழங்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து கருப்பாநதி அணைக்கட்டை பார்வையிட்டு உதவி பொறியாளர் ஆனந்த் மற்றும் விவசாயிகளிடம் இந்த அணையின் மூலம் எவ்வளவு பாசன வசதி பெறுகிறது என்பது குறித்து கேட்டறிந்தார். பின்னர் போகநல்லூரில் உள்ள நகராட்சி உரக்கிடங்கு மற்றும் அகதிகள் முகாமை ஆய்வு செய்தார். பின்னர் கடையநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டு வரும் அனைத்து கட்டிடங்களையும் பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகின்றனர். கூடுதலாக மார்க்கெட் பகுதியில் எமர்ஜென்சி வழியை உருவாக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். உடன் தாசில்தார் அழகப்பராஜா, நகராட்சி ஆணையாளர் தங்கபாண்டி, சுகாதார அலுவலர் நாராயணன், ஆய்வாளர்கள் சேகர், மாரிச்சாமி, உதவி பொறியாளர் முரளி, நகரமைப்பு அலுவலர் காஜாமைதீன், அரசு மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர் கிருஷ்ணன், டாக்டர்கள் தங்கச்சாமி, ரவி, அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் செய்யது ஷமீம்ஆயிஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kadayanallur Government Hospital ,
× RELATED கடையநல்லூர் அரசு மருத்துவமனையில்...