×

தஞ்சை மாவட்டம் முழுவதும் 2வது நாளில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 66 பேர் வேட்புமனு தாக்கல்

தஞ்சை, டிச. 11: தஞ்சை மாவட்டத்தில் 2வது நாளான நேற்று உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 66 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27, 30ம் தேதிகள் என இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. ஊரக பகுதிகளில் உள்ள 5,462 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. 589 கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கும், 4,569 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், 14 ஊராட்சி ஒன்றியத்தில் 276 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், மாவட்ட ஊராட்சியில் 28 வார்டு உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் தஞ்சை, கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம், பூதலூர், திருவையாறு, அம்மாப்பேட்டை, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் முன்தினம் துவங்கியது.

பாபநாசம் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்று ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இதேபோல் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்று 54 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் 76 பேர் தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து இதுவரை 130 பேர் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு நேற்று 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு இதுவரை 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று வரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 5,462 பதவிகளுக்கு 151 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று மட்டும் 66 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் 85 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

திருவையாறு:திருவையாறு ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சி வார்டு, 18 ஒன்றிய கவுன்சிலர் வார்டு, 40 சிற்றூராட்சி, 303 ஊராட்சி வார்டு ஆகிய பதவிகளுக்கு நேற்று முதல் வேட்புமனு தாக்கல் துவங்கியது.இதில் மாவட்ட ஊராட்சி வார்டு 2க்கும், ஒன்றிய கவுன்சிலர் வார்டு 18க்கும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. சிற்றூராட்சி தலைவர் பதவிக்கு அள்ளுர் ஊராட்சியில் தலைவர் பதவிக்கு கார்த்திகேயன் (41) என்பவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். மற்ற 39 சிற்றூராட்சி தலைவர் பதவிக்கு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. சிற்றூராட்சியில் உள்ள 303 வார்டு உறுப்பினர் பதவிக்கு 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். திருவையாறு ஒன்றியத்தில் 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்று தேர்தல் நடத்தும் அலுவலரும், வட்டார வளர்ச்சி அலுவலருமான சாமிநாதன் தெரிவித்தார்.

திருக்காட்டுப்பள்ளி:ஞ்சை மாவட்டம் பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 2ம் நாளான நேற்று ஒருவர் மட்டும் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். முதல் நாளான நேற்று முன்தினம் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 6 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.இந்நிலையில் 2ம் நாளான நேற்று (10ம் தேதி) மேகளத்தூர் ஊராட்சி 2வது வார்டு உறுப்பினர் பதவிக்கு ஒருவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தார். மாவட்ட ஊராட்சி, ஒன்றிய கவுன்சில் மற்றும் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட நேற்றும் ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.

Tags : government ,
× RELATED கிராம பஞ்சாயத்து தேர்தலில் வெற்றி...