×

தொடர் மழையால் சேதமடைந்த பாவூர்சத்திரம் - கடையம் சாலை வாகன ஓட்டிகள் பாதிப்பு

பாவூர்சத்திரம், டிச.11: பாவூர்சத்திரம் அடுத்த செல்வவிநாயகர்புரத்தில் இருந்து கடையம் செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் பாவூர்சத்திரத்தை அடுத்த செல்வவிநாயகபுரத்தில் இருந்து கல்லூரணி, சிவநாடானூர், அய்யனூர், மற்றும்  திரவியநகர் வழியாக கடையம் செல்வதற்கு   குறுக்கு சாலையாக இருப்பதால் பெரும்பாலோனோர் இந்த வழியை  பயன்படுத்தி வருகின்றனர். இதனால் வாகன  ஓட்டிகளுக்கு நேரமும், எரிபொருள் செலவும் மிச்சமாகிறது. இதற்காக செல்வவிநாயகபுரத்தில் திரவியநகர் வரை புதிய ரோடு பல வருடங்களுக்கு முன் போடப்பட்டது. தற்போது சிவநாடனூர் வரை தார் சாலை நன்றாக உள்ளது. சிவநாடானூரில் இருந்து அய்யனூர் முதல் திரவியநகர் வரை செல்லும் சாலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. இந்த சாலையின் இருபுறமும் விளைநிலங்கள் அதிகளவில் உள்ளதால் விவசாயிகளும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகளும் பாவூர்சத்திரம் மற்றும் திரவியநகர் செல்வதற்கு இச்சாலையில் சைக்கிளில் தான் பயணிக்கின்றனர்.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் இச்சாலை ஜல்லிகற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவ, மாணவிகளும் பாதிக்கப்படுகின்றனர்.
தற்போது மழை பெய்து வருவதால் இச்சாலையில் ஏற்பட்ட பள்ளங்களில் மழை நீர் தேங்கி பள்ளம்  இருப்பது தெரியாமல் வாகனத்தில் செல்வோர் கீழே விழுகின்றனர். இரவு நேரங்களில் இச்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே விபரீதம் ஏற்படும் முன் சம்பந்தபட்ட நிர்வாகம் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நலன் கருதி சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED ஸ்காட் பொறியியல் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி