மகுடஞ்சாவடி வட்டாரத்தில் வேளாண் அதிகாரி ஆய்வு

இளம்பிள்ளை, டிச.11: மகுடஞ்சாவடி வட்டாரத்தில் வேளாண் இணை இயக்குநர் திடீர் ஆய்வு செய்தார். மகுடஞ்சாவடி வட்டாரத்தில், சேலம் வேளாண்மை இணை இயக்குநர் கமலா ஆய்வு பணியில் ஈடுபட்டார். அப்போது, வேளாண்மைத்துறை சார்பில் கண்டர்குலமாணிக்கம் கிராமத்தில் அருணாசலம் மற்றும் முத்து ஆகிய விவசாயிகளின் வயல்களில் 3 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட பாசிப்பயறு சிஓ.8 சான்று நிலை விதைப்பண்ணைகளையும், சீரங்கன் வயலில் 2 ஏக்கரில் அமைக்கப்பட்ட தட்டைப்பயறு சிஓ(சிபி) 7 விதைப்பண்ணைகளையும் ஆய்வு செய்து, வேளாண் தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்கவும், பயறுவகை விதைப்பண்ணைகளில் பூக்கும் தருணத்தில் 2 சதவீதம் டிஏபி தெளிக்கவும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

மேலும், என்எப்எஸ்எம் பயறு வகை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட வரப்புப்பயிர் துவரை வயலையும் ஆய்வு செய்தார். பயிர் மதிப்பீட்டாய்வு திட்டத்தின் கீழ் துணை வேளாண்மை அலுவலரால் தேர்வு செய்யப்பட்ட எள்(டிஎம்வி 3) திடலையும் ஆய்வு செய்து தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கினார். அட்மா திட்டத்தின் கீழ், கனககிரி கிராமத்தில் பெரியசாமி  வயலில் அமைக்கப்பட்ட மண்புழு உர செயல்விளக்கத் திடல்களை ஆய்வு செய்து, மண்புழு உரம் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். மேலும், இவ்வாண்டு செயல்படுத்தப்படும் மத்திய மற்றும் மாநில அரசு திட்டங்களை ஆய்வு செய்து, திட்டங்களை சிறப்பாகவும், உரிய காலத்திலும் முடிக்க அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குநர் மணிமேகலாதேவி, உதவி விதை அலுவலர் செந்தில் மற்றும் அட்மா தொழில்நுட்ப அலுவலர்கள் மகேந்திரன், கார்த்திகேயன் உள்ளிட்டேர் உடனிருந்தனர்.

Related Stories: