உள்ளாட்சி தேர்தலுக்கு 2வது நாளில் 138 பேர் வேட்புமனு தாக்கல்

சேலம், டிச.11: சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு 2வது நாளில் 138 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கு வரும் 27, 30ம் தேதியில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. வரும் 16ம் தேதி மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். சேலம் மாவட்டத்தில், 29 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 20 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 288 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 385 கிராம ஊராட்சி மன்றத்தலைவர் மற்றும் 3,597 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. கிராம ஊராட்சி அலுவலகங்களில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும், ஒன்றிய அலுவலகங்களில் கிராம ஊராட்சி தலைவர், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் 309 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.

இதை தொடர்ந்து, 2வது நாளாக நேற்று மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு 2 பேரும், ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு 20 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 112 பேரும் என மொத்தமாக 138 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். சேலம் மாவட்டத்தில் 2 நாளில் 447 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதேபோல், ஒவ்வொரு அலுவலகத்திலும் வேட்புமனுக்களை வாங்கிச் செல்ல அதிகபடியானோர் வந்திருந்தனர். மனுக்களை பெற்றுச் சென்றவர்கள், இன்னும் ஓரிருநாளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மனு தாக்கலையொட்டி, ஒவ்வொரு அலுவலகத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: