×

புதுகை பஞ்சாப் நேஷனல் வங்கியில் காணாமல் போன நகைகளுக்கு பதிலாக ரொக்கம் வரவு வைப்பு

புதுக்கோட்டை, டிச.11: புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த ரூ.4.84 கோடி மதிப்பிலான 13.75 கிலோ தங்க நகைகள் கடந்த ஏப்ரல் 28ம்தேதி காணாமல் போனது.இந்த சம்பவத்தில் அந்த வங்கியில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்த புதுக்கோட்டை திருக்கட்டளை பகுதியை சேர்ந்த மாரிமுத்து ஈடுபட்டது தெரியவந்தது. 28ம் தேதியிலிருந்து மாயமான இவர் மே 3ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அடுத்த கோடியக்கரை கடற்கரை பகுதியில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

இதுகுறித்து கணேஷ் நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் மாரிமுத்து நகைகளை திருடிபல்வேறு தனியார் நிதிநிறுவனங்களில் 4 கிலோ நகைகளை அவரது பெயரிலும், அவரது உறவினர்கள் பெயரிலும் நகை அடகு வைத்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த தனியார் நிதி நிறுவனங்களுக்கு போலீசார் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, நகையை வேறு யாருக்கும் கொடுக்கக்கூடாது விற்கவும் கூடாது எனக்கூறி உள்ளனர். இந்நிலையில் வங்கியில் மாயமான நகைக்கு பதிலாக பணமோ அல்லது நகையோ வாடிக்கையாளருக்கு கொடுக்கப்படும் என வங்கி நிர்வாகம் கடந்த மே மாதம் அறிவித்து இருந்தது.

அதன்படி நேற்று புதுக்கோட்டை தெற்கு ராஜா வீதியில் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மாயமானதாக கூறப்பட்ட 13.75 கிலோ தங்க நகைகளுக்கு பதிலாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இன்சூரன்ஸ் மூலம் நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கி நாளை (வியாழக்கிழமை) வரை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து வங்கி நிர்வாகத்தால் அழைக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் நகைகள் அடகு வைத்ததற்காக அட்டையை கொண்டுவந்து, வங்கியில் கொடுத்து, தங்களது நகைக்கு பதிலாக பணத்தை வங்கி கணக்கில் வரவு வைத்து விட்டு செல்கின்றனர்.இது குறித்து வாடிக்கையாளர்கள் கூறுகையில், காணாமல் போன அடகு நகைக்கு பதிலாக ஒரு கிராமிற்கு ரூ.3 ஆயிரத்து 600-ம், சேதாரமும், ஜி.எஸ்.டி தொகையும் வழங்கப்படுவதாக வங்கி நிர்வாகம் கூறி உள்ளது. மேலும் நகைக்கு உண்டான வட்டியை கொடுக்கும் பணத்தில் இருந்து பிடித்தம் செய்து வங்கி நிர்வாகம் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்க உள்ளது. இதனால் நாங்கள் நிம்மதி அடைந்துள்ளோம் என்றனர்.

Tags : jewelery ,Pudukkai Punjab National Bank ,
× RELATED புதுச்சேரியில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டில் 54 சவரன் நகை கொள்ளை..!!