×

வேளாண் துறை ஆலோசனை ஆனைக்கொம்பன் ஈயை கட்டுப்படுத்தும் திறனுடைய குறுகியகால நெல் ரகங்களை சாகுபடி செய்யலாம்

ஜெயங்கொண்டம்,டிச.11: ஆனைக்கொம்பன் ஈயை கட்டுப்படுத்தும் திறனுடைய குறுகியகால நெல் ரகங்களை சாகுபடி செய்யலாம் என வேளாண் அதிகாரி அறிவுரை வழங்கியுள்ளார். ஜெயங்கொண்டம் வட்டாரத்தில் சமீபத்தில் வடகிழக்குப் பருவமழை அதிகமாக பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள பயிர்களில், குறிப்பாக நெற்பயிரில் பூச்சி, நோய் தாக்குதல் பரவலாக தென்படுகிறது. இவற்றுள் ஆனைக்கொம்பன் ஈ எனும் பூச்சியின் தாக்கம் அதிகம் தென்படுகிறது. நெல் நடவுசெய்த 35, 45 நாட்களில் இப்புழு பயிரினை அதிகம் சேதப்படுத்துகிறது.

இந்த ஈயின் தாக்குதலால் நெற்பயிரில் தூர்களுக்கு பதிலாக கொம்பு போன்ற கிளைப்புகள் வெண்மை நிறம் அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் வெங்காய இலை போன்று தோன்றும். தாய் ஈக்கள் இலைகளின் மேற்புறம் இடும் முட்டைகளிலிருந்து வரும் புழுக்கள் நெல் குருத்துக்களை துளைத்து குழல்களாக மாற்றிவிடும். இதனால் நெற்கதிர்கள் உருவாகாமல் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும். ஆனைக்கொம்பன் ஈயின் தாக்குதலை எதிர்க்கும் திறனுடைய குறுகியகால நெல் ரகங்களான ஏடிடி-39 மற்றும் ஏடிடி-45, மத்திய கால நெல் ரகமான எம்டியு-3 ஆகிய ரகங்களை சாகுபடி செய்யலாம். பரிந்துரைக்கப்பட்ட அளவு தழைச்சத்தினை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

இயற்கை எதிரிகளான ஊசித்தட்டான், குளவி, நீலதாடை சிலந்தி மற்றும் வட்ட சிலந்தி ஆகியவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும். ஆனைக்கொம்பன் தாக்குதலிலிருந்து நெற்பயிரை பாதுகாக்க நெல் வயலில் களைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.வயலில் தேங்கியுள்ள தண்ணீரை வடித்துவிட வேண்டும். ஏக்கருக்கு 5-6 எண்கள் விளக்கு பொறிகளை வைத்து பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். 100 இலைகளில் 10 இலைகளுக்கு மேல் தாக்குதல் தென்பட்டால், ஏக்கருக்கு 400 மிலி கார்போசல்பான் 25சதம் டபிள்யூஜி 500 கிராம் பிப்ரோனில் 5சதம் எஸ்சி அல்லது 500 மிலி குளோர்பைரிபாஸ் 20சதம் ஈசி அல்லது 40 கிராம் தயோமீத்தாக்ஸம் 25சதம் டபிள்யூஜி இவற்றுள் ஏதாவது ஒன்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து இதை கட்டுப்படுத்தலாம்.மேலும் விபரங்களுக்கு ஜெயங்கொண்டம் வட்டார வேளாண்மை அலுவலர் மற்றும் தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலர்களை அணுகலாம் என ஜெயங்கொண்டம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags : Department of Agriculture ,
× RELATED நாட்டுப் பசுவில் நன்மைகள் அதிகம்: வேளாண்துறை தகவல்