குப்பையில் சேகரித்த பொருட்கள் விற்பனை துப்புரவு ஊழியர்களுக்கு ரூ.5.25 லட்சம் வழங்கல்

திருப்பூர், டிச. 11:  மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் குப்பையில் சேகரித்த பொருட்களின் விற்பனை தொகை, ரூ.5.25 லட்சம் அவர்களுக்கே வழங்கப்பட்டது.  திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில், 1200க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் உள்ளனர். வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் ஊழியர்கள், அதை தரம் பிரித்து மறு பயன்பாட்டுக்கு ஏதுவான பொருட்களை விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மறு சுழற்சிக்குப் பயன்படும் பிளாஸ்டிக் குப்பைகள், பழைய இரும்பு பொருட்கள், அட்டைப் பெட்டிகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு, அதற்கான தொகை அந்த ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் இது வரை ரூ.5.25 லட்சம் விற்பனை தொகை பெறப்பட்டுள்ளது. இது அந்த ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரப் பிரிவு அலுவலர்கள் கூறியதாவது: மறு சுழற்சிக்குப் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் உள்ளிட்டவை இங்குள்ள பேலிங் மெஷின் மூலம் பேக்கிங் செய்து சிமென்ட் ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அவ்வகையில் மதுக்கரை மற்றும் அரியலூர் சிமென்ட் ஆலைகளுக்கு இது வரை மொத்தம், 160 மெட்ரிக் டன் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன’ என்றனர். திருப்பூரில் சேகரமாகும் மக்கும் குப்பைகளைக் கொண்டு நுண் உரம் உற்பத்தி செய்யும் வகையில், திட்டமிடப்பட்டது. நான்காம் மண்டலத்தில் ஆண்டிபாளையம், தென்னம்பாளையம் பகுதிகளில் மூன்று உர உற்பத்தி மையங்கள் துவங்கி இயங்கி
 வருகின்றன. கடந்த நான்கு மாதமாக இவற்றில் இதுவரை 848 மெட்ரிக் டன் மக்கும் குப்பை மூலம் உருவான 77 மெட்ரிக் டன் எடையுள்ள உரம் உற்பத்தி செய்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. கையிருப்பில் உள்ள ஐந்து மெட்ரிக் டன் உரம், பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் தென்னம்பாளையம் உர உற்பத்தி மைய வளாகத்தில் நடந்தது. மாநகர நல அலுவலர் பூபதி, மண்டல உதவி கமிஷனர் கண்ணன் ஆகியோர் இதை விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஐந்து மற்றும் 15 கிலோ எடையுள்ள பைகளில் வழங்கினர்.

Tags : cleaning staff ,
× RELATED துப்புரவு பணியாளர் பணி 3 இடங்களுக்கு 23 பேர் போட்டி