×

காவல்துறை சார்பில் காவலன் செயலி மின்வாரிய பெண் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு

மஞ்சூர், டிச.11: காவலன் செயலி குறித்து மின்வாரிய பெண் ஊழியர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் காவல்நிலையத்தின் சார்பில் குந்தா புனல் உற்பத்தி வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இதில், இன்ஸ்பெக்டர் தவுலத்நிஷா கலந்து கொண்டு காவல்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட காவலன் செயலியின் பயன்கள் குறித்தும் இந்த செயலியால் பெண்களின் பாதுகாப்பு குறித்தும் விளக்கமளித்தார். தொடர்ந்து ஊழியர்கள் தங்களது செல்போன்களில் காவலன் செயலி பதிவிறக்கம் செய்யும் முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் எஸ்.ஐ., ராஜ்குமார் மற்றும் போலீசார், மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர். போலீசாரின் இந்த செயல்முறை விளக்கத்தின் போது ஊழியர் ஒருவர் தனது செல்போனில் செயலியை பதிவிறக்கம் செய்தபோது சென்னையில் உள்ள மாஸ்டர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு சென்றது. இதை தொடர்ந்து மறுகணமே கட்டுப்பாட்டு அறையில் இருந்து சம்பந்தப்பட்ட ஊழியருக்கு அழைப்பு வந்து விவரம் கேட்கப்பட்டது.  இதையடுத்து போலீசார் தலையிட்டு விழிப்புணர்வு முகாம்
நடைபெறுவதாக தெரிவித்தனர்.

Tags : police activist power woman ,
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்