மேட்டுப்பாளையம் நடூர் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு விரைந்து வழங்க கோரிக்கை

கோவை, டிச. 11: கோவை அடுத்த மேட்டுப்பாளையம் அருகே நடூர் ஏடி காலனியில் சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் பலியான சம்பவத்தில் தமிழக அரசு அறிவித்த ரூ.10 லட்சத்தில் ரூ.4 லட்சம் மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள ரூ.6 லட்சத்தை விரைந்து வழங்க பாதிக்கப்பட்டவர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை மேட்டுப்பாளையம் அருகே நடூர் ஆதிதிராவிடர் காலனியில் கடந்த 2ம் தேதி 20அடி சுற்றுச்சுவர் இடிந்து வீடுகளின் மேல் விழுந்ததில் 17 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவத்தால் தமிழகமே அதிர்ச்சியடைந்தது. இதில் சுற்றுச்சுவரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். இதனிடையே இச்சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் தரப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதில் ரூ.4 லட்சம் முதல்கட்டமாக வழங்கப்பட்ட நிலையில் மீதம் உள்ள ரூ.6 லட்சம் இன்னும் வழங்கப்படவில்லை. கடந்த வாரம் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் சம்பவ இடத்தை பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் கூறுகையில் மீதம் வழங்கப்படாமல் உள்ள ரூ.6 லட்சத்தை உடனே வழங்க அரசை வலியுறுத்தப்படும் என தெரிவித்திருந்தார். தற்போது ரூ.6 லட்சத்தை உடனே வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பாதிக்கப்பட்டவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வை.குடியரசு கூறுகையில், ‘‘தமிழக அரசு அறிவித்த ரூ.10 லட்சத்தில் 11 பேரின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 6 குடும்பங்களுக்கு அந்த ரூ.4 லட்சம் இன்னமும் வழங்கப்படவில்லை. மீதம் உள்ள 6 லட்சமும் முதல் கட்டமாக வழங்கப்படாத குடும்பங்களுக்கு ரூ.10 லட்சமும் விரைந்து வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் பலியானவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’’ என்றார்.

Tags : victims ,families ,Mettupalayam Nadur ,
× RELATED அதிக வட்டி தருவதாக நிதி நிறுவனம் மோசடி...