கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ காப்பீட்டு திட்டம் தேசிய சுகாதார குழு ஆய்வு

கோவை, டிச.11: ேகாவை அரசு மருத்துவமனையில் பிரதமரின் தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக தேசிய சுகாதார குழு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். நாடு முழுவதும் மத்திய அரசின் நிதியுதவியுடன் பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற ேதசிய மருத்துவ காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இதய நோய்கள், சிறுநீரகம், கல்லீரல் குறைபாடு, நீரிழிவு நோய்கள் உள்பட 1,300க்கும் மேற்பட்ட நோய்களுக்கு அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் செலவுகளை மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் பகிர்ந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் இத்திட்டத்தில் சுமார் 1.57 கோடி குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திற்கு ஆண்டிற்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு திட்டத்தில் இலவச சிகிச்சை பெற முடியும். இந்த திட்டம் துவங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், நாடு முழுவதும் தேசிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் செயல்பாடுகள், பலனடைந்தவர்களின் விவரங்கள் தொடர்பாக தேசிய சுகாதார குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தேசிய சுகாதார குழுவினர் கடந்த இரண்டு நாட்களாக கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர். பின்னர், திட்டம் தொடர்பான பலன்கள் மற்றும் செயல்படுத்துவதில் உள்ள பிரச்னைகள் குறித்து  அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இது குறித்து கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகன் கூறுகையில், ‘‘தேசிய சுகாதார குழுவினர் பிரதமரின் காப்பீட்டு திட்டம் தொடர்பாக இரண்டு நாட்கள் ஆய்வு செய்தனர். இதில், எவ்வளவு பேர் பயனடைந்தனர் உள்ளிட்ட தகவல்களை சேகரித்துள்ளனர். தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் நடைமுறையில் இருக்கிறது. இதில், பலர் பயனடைந்து வருகின்றனர். இதனால், இரண்டு திட்டங்களில் பயனடைந்தவர்கள் தொடர்பாக சரியாக கணிக்க முடிவதில்லை. பிரதமரின் காப்பீட்டு திட்டத்திற்கு என தனியாக அட்டை அளித்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளோம்,’’ என்றனர்.

Tags : Coimbatore ,Government Hospital ,
× RELATED கோவை அரசு மருத்துவமனையில் புதிய மருத்துவ படிப்பு எம்சிஐ அதிகாரிகள் ஆய்வு