×

குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் போராட்டம்

ஈரோடு, டிச.11: குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண கோரி ஈரோட்டில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 57வது வார்டு மோசிக்கீரனார் 5வது வீதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு குழிகள் தோண்டப்பட்டது. அப்போது, குடிநீர் மெயின் குழாய் மற்றும் வீட்டு இணைப்புகளுக்கான குழாய்கள் உடைந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் 15 நாட்களாக குழாய் உடைப்பை சரி செய்யவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, பொதுமக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று ஒன்று திரண்டு  மோசிக்கீரனார் வீதியில் காலிக்குடங்களுடன் மாநகராட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணியின் போது தவறுதலாக குடிநீர் குழாய்களையும் உடைத்துவிட்டனர். இதை சரி செய்து கொடுப்பதாக கூறிய அதிகாரிகள், 15 நாட்களாக கண்டுகொள்ளாமல் உள்ளனர். மேலும், பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட மண், சாக்கடையில் கொட்டப்பட்டதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் செல்கிறது. ஒரு சில இடங்களில் சாலையிலேயே கழிவுநீர் குளம் போல தேங்கி நிற்கிறது. இதனால், கடும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. குடிநீர் இல்லாமல் 15 நாட்களாக மக்கள் அவதிப்பட்டு வருகிறோம். இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணவில்லையெனில் மாநகராட்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags : struggle ,women ,
× RELATED நாகை அருகே ரேசனில் வழங்கப்பட்ட இலவச...