உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு ஒரு வாகனத்துக்கு மட்டுமே அனுமதி

ஈரோடு, டிச.11: ஈரோடு தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: ஊரக உள்ளாட்சி அமைப்பான பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்யும்போது, வேட்பாளர் மற்றும் அவரை முன்மொழிபவர் மற்றும் அவர் விரும்பும் 3 பேர் என 5 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இதில், வேட்பு மனுத்தாக்கல் செய்து, வேட்பு மனு ஏற்கப்பட்டபின், அவருக்கு வழங்கப்படும் வேட்பாளர் அங்கீகார நகலுடன் ஒரு வேட்பாளர், ஒரு வாகனத்துக்கு மட்டுமே அந்தந்த பகுதி ஆர்.டி.ஓ.விடம் அனுமதி பெற வேண்டும்.

அவர் சார்ந்த பகுதியில் பிரசாரம், பொதுக்கூட்டம், உள் அரங்க கூட்டம் நடத்துவதாக இருந்தாலும் ஆர்.டி.ஓ. மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் அல்லது டி.எஸ்பி.யிடம் அனுமதி பெற வேண்டும். பேனர், பிளக்ஸ் போர்டு வைக்க முற்றிலும் தடை உள்ளது.

சின்னம், பிரசார விபரம், வாக்குறுதிகள் போன்றவை இருந்தால் அவற்றை துண்டு பிரசுரங்களில் மட்டுமே வழங்க வேண்டும். பஞ்சாயத்து கவுன்சிலர் ரூ.9 ஆயிரம் வரையும், பஞ்சாயத்து தலைவர் ரூ.34 ஆயிரம் வரையும், யூனியன் கவுன்சிலர் ரூ.85 ஆயிரம் வரையும், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ரூ.1.70 லட்சம் வரையும் மட்டுமே செலவிட வேண்டும். இதற்கான செலவுத்தொகையை தேர்தல் முடிந்த ஒரு மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது வெளியிடப்பட்ட உணவு வகைகளின் விலைப்பட்டியலின்படியே, இப்போதும் கணக்கிடப்படும். அதற்கேற்ப செலவுகளை வைத்து கொள்ள வேண்டும். அவ்வாறு செலவினங்களை தாக்கல் செய்யாதவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும். அவர் மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.தேர்தல் பணிகளை கவனிக்க, மாவட்ட அளவில் தேர்தல் பார்வையாளரும், சிறப்பு நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்படுவர். அவர்கள், பிரசாரம், செலவினம், விதிமீறல் போன்றவற்றை கவனிப்பார்கள். வரும் 19ம் தேதி வேட்பாளர்கள் மனுவை வாபஸ் பெற்று, இறுதி பட்டியல் அறிவிக்கப்பட்டதும், பறக்கும் படையினர் செயல்பட துவங்குவர் என்றனர்.

ஒரே நாளில் தேர்தல் பயிற்சி முகாம், தேர்வு நடப்பதால் ஆசிரியர்கள் குழப்பம் ஈரோடு, டிச.11: 8ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி திறன் தேர்வு வரும் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில் உள்ளாட்சி தேர்தல் பணிக்கான முதல்கட்ட பயிற்சி முகாமும் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழி திறன் படிப்புதவி தொகை தேர்வு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வை, 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் எழுதலாம். இத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மாதம் ரூ.1,000 வீதம் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம், பிளஸ் 2 படிப்பு முடியும் வரை கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இத்தேர்வு தமிழகம் முழுவதும் உள்ள 533 மையங்களில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 292 மாணவ, மாணவியர் எழுத பதிவு செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இத்தேர்வினை ஈரோடு, கோபி, பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 18 மையங்களில் 4824 மாணவ, மாணவியர் எழுத இருந்தனர். கடந்த 1ம் தேதி நடைபெற இருந்த இத்தேர்வு தொடர் மழையின் காரணமாக மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்தேர்வு வரும் 15ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் என்றும், இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசு தேர்வுகள் இயக்குநர் உஷாராணி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையே, தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான முதல்கட்ட பயிற்சி முகாம் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நாளில் தேர்வு அறை கண்காணிப்பாளர் பணிக்கு செல்வதா? அல்லது தேர்தல் பயிற்சி முகாமிற்கு செல்வதா? என்ற குழப்பத்தில் ஆசிரியர்கள் உள்ளனர். மேலும், தேர்வுகள் நடைபெற உள்ள பள்ளிகளில் வெளிநபர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லாத நிலையில் அப்பள்ளிகளில் எப்படி தேர்தல் பயிற்சி முகாமில் கலந்து கொள்வது? என்ற கேள்வியும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Related Stories:

>