லாரி கடைக்குள் புகுந்து 3 பேர் காயம்

மொடக்குறிச்சி, டிச.11: மொடக்குறிச்சி அருகே அவல்பூந்துறை நால் ரோட்டில் கடந்த ஓராண்டாக சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது. விரிவாக்கப் பணிக்காக அளவீடு செய்தபோது தனியார் நிலத்தில் வருவதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து விரிவாக்க பணி கிடப்பில் போடப்பட்டது. ஆனால், சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட குழி மூடப்படாமலேயே இருந்தது. இதனால், அப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்து ஏற்படுகிறது. இந் நிலையில், சாலை விரிவாக்கப் பணி நடைபெறாததை கண்டித்து திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என மொடக்குறிச்சி ஒன்றிய திமுக செயலாளர் குணசேகரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில் கடந்த வாரம் சாலை விரிவாக்கப் பணி நடந்தது. ஆனால், உள்ளாட்சி தேர்தல் அறிவித்த பிறகு அந்த பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. நேற்று அரசலூரில் இருந்து ஈரோடு நோக்கி கரும்பு லோடு ஏற்றி வந்த லாரி, அவல்பூந்துறை சாலை வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த கடைக்குள் புகுந்தது.இந்த விபத்தில் பெண் உள்பட 3 பேர் காயமடைந்தனர். 5 பைக்குகள் சேதமானது.

Related Stories:

>