உண்டு உறைவிட பள்ளியில் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சத்தியமங்கலம், டிச.11: உண்டு உறைவிட பள்ளியில் பாலியல் வன்கொடுமை, மனித கடத்தல் மற்றும் கொத்தடிமை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த கலை நிகழ்ச்சி நடந்தது. டிச.10ம் தேதி மனித உரிமை தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மாற்று ஊடக மையம்,  சிறகுகள் விரிய அமைப்பு மற்றும் ரீடு நிறுவனம்  சார்பில் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மனித கடத்தலுக்கு எதிரான பிரசாரம், கொத்தடிமை ஒழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சத்தியமங்கலம் அருகே உள்ள புதுவடவள்ளி கஸ்தூரி பாலிகா உண்டு உறைவிட பள்ளியில் திருச்சி பாரதி கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் மனித கடத்தல், கொத்தடிமை ஒழிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு பாடல்களுக்கு கரகாட்டம், தப்பாட்டம் ஆடியும், விழிப்புணர்வு நாடகம் நடத்தியும் பள்ளி மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும், மனித கடத்தல், பாலியல் வன்கொடுமை மற்றும் கொத்தடிமை ஒழிப்பு தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கு விளக்கி கூறப்பட்டதோடு அது தொடர்பான இலவச தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால் இந்நிகழ்ச்சி பயனுள்ளதாக அமைந்ததாக அரசுப்பள்ளி மாணவ, மாணவியர் தெரிவித்தனர். இதில் ரீடு இயக்குனர் கருப்புசாமி, சிறகுகள் விரிய அமைப்பின் மாநில அமைப்பாளர் தேவநேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>