பர்கூர் இன மாடுகளின் எண்ணிக்கையை 25 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை

ஈரோடு, டிச. 11: பர்கூர் இன மாடுகளின் எண்ணிக்கையை வரும் 2025ம் ஆண்டுக்குள் 25 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ஒளிரும் ஈரோடு அமைப்பு மற்றும் வேளாண் அறிவியல் கழகம் சார்பில் பர்கூர் இன நாட்டு மாடுகளின் பால் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிமுக விழா ஈரோட்டில் நேற்று நடந்தது. விழாவில் கலந்து கொண்ட இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் முதுநிலை விஞ்ஞானி அழகேசன் நிருபர்களிடம் கூறியதாவது:இந்தியாவில் 43 வகையான நாட்டு மாடுகள் உள்ளன. இதில், தமிழகத்தில் ஆலாங்குடி, காங்கயம், பர்கூர் உள்ளிட்ட 5 நாட்டு இன மாடுகள் உள்ளன. இதேபோல, 16 வகையான நாட்டு எருமைகள் உள்ளன. இதில் தோடா, பர்கூர் ஆகிய இரண்டும் தமிழகத்தில் உள்ளது.

1997ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பர்கூர் இன மாடுகளின் எண்ணிக்கை 1 லட்சமாக இருந்தது. பின்னர், படிப்படியாக குறைந்து தற்போது வெறும் 5 ஆயிரம் மாடுகள் மட்டுமே உள்ளன. மாடுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையில் பர்கூரில் அரசின் சார்பில் பர்கூர் கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டு விந்தணுக்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.வரும் 2025ம் ஆண்டுக்குள் பர்கூர் இன மாடுகளின் எண்ணிக்கை 25 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, பர்கூர் இன மாடுகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் அம்மாடுகளை வளர்க்கும் மலைவாழ் மக்களை பொருளாதார ரீதியாக உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன்ஒருபகுதியாக, பர்கூர் இன மாடுகளை வளர்க்கும் மலைவாழ் மக்களிடமிருந்து பால் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் மேய்ச்சலில் இருக்கும் இம்மாடுகளின் பால் ஏ2 வகையை சேர்ந்தது ஆகும். இதுதொடர்பாக, பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பர்கூர் இன மாடுகளின் பாலினை வாங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஈரோட்டில் குமலன்குட்டையில் உள்ள பூ மாலை வணிக வளாகத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது.இவ்வாறு அழகேசன் கூறினார்.

Related Stories:

>