×

வேலூர் அரசு மருத்துவமனை எதிரே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், புகையிலை பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி

வேலூர், டிச.11: வேலூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. குறிப்பாக பிளாஸ்டிக் கவர்கள், டம்ளர்கள், பிளாஸ்டிக் வாட்டர் பாக்கெட் உட்பட 10க்கும் மேற்பட்ட பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. ஆனால், வேலூர் மாவட்டத்தில் தடையின்றி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் கடந்த சில நாட்களாக வேலூர் மாநகராட்சி உட்பட பகுதிகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களின் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரில், வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுரேஷ், இளங்கோவன், கிளமண்ட், ரவீந்தர்நாத் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது, 100 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட ₹10 ஆயிரம் மதிப்பு புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர். மேலும் கடைகளில் காலாவதியான குளிர்பானங்களை தரையில் கொட்டி அழித்தனர். தொடர்ந்து கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால், கடைக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.

Tags : Food Security Department ,Vellore Government Hospital ,
× RELATED தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 50 கடைகளுக்கு சீல்