×

வியாபாரிகள் திருவண்ணாமலை சென்றுவிட்டதால் பொய்கை மாட்டு சந்தையில் விற்பனை மந்தம்

வேலூர், டிச. 11: திருவண்ணாமலையில் நடக்கும் சந்தைக்கு பெரும்பாலான வியாபாரிகள் சென்றுவிட்டதால், வேலூர் அடுத்த பொய்கை மாட்டுச் சந்தையில் நேற்று வர்த்தகம் ₹50 லட்சத்துக்கு சரிந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த பொய்கையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் மாட்டுச் சந்தை நடக்கிறது. இங்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் சுமார் 1200க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டுவரப்பட்டு, ₹1 கோடி வரை விற்பனை நடைபெறும். இதுதவிர ஆடு, கோழி, வாத்து, காடை ஆகியனவும் விற்பனை செய்யப்படும். இந்நிலையில், பொய்கை மாட்டுச் சந்தையில் நேற்று வர்த்தகம் ₹50 லட்சமாக குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘இன்று(நேற்று) கார்த்திகை தீபத்தையொட்டி திருவண்ணாமலையில் குதிரை, மாடு ஆகியன விற்பனை செய்யும் சந்தை நடக்கிறது. பெரும்பாலான வியாபாரிகள் திருவண்ணாமலையில் நடக்கும் சந்தைக்கு சென்றுவிட்டனர். இதனால், பொய்கை சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்திருந்தது. சுமார் 600 மாடுகள் வரைதான் விற்பனை ெகாண்டுவரப்பட்டது. இதில் சுமார் 400 மாடுகள் வரை விற்பனையானது. அதன்படி ₹50 லட்சம் வரை வர்த்தகம் நடந்தது. வழக்கமாக ₹1 கோடிக்கும் அதிகமாக வர்த்தகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது’ என்றனர்.

Tags : Thiruvannamalai ,traders ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...