×

போலிகள் புழக்கமும் அதிகரிப்பதாக புகார் களைகட்டும் மொபைல் மதுபான விற்பனை போலீசாரின் தீவிர நடவடிக்கைக்கு கோரிக்கை

வேலூர், டிச.11: வேலூர் மாவட்டத்தில் மொபைல் மதுபாட்டில் விற்பனையும், போலி மதுபாட்டில் புழக்கமும் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 180 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகிறது. இதில் ஒரு சில டாஸ்மாக் கடைகள் கோயில்களுக்கு அருகிலும், பள்ளிகளுக்கு அருகில் மாணவர்கள் வந்து செல்லும் பகுதிகளிலும் அமைந்துள்ளன. பள்ளிகளுக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் மாலை நேரத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு மூடி வைக்கப்படுகிறது. இதுதவிர பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக அடிக்கடி இடமாற்றம் செய்ய வேண்டிய பிரச்னையை சமாளிக்கும் வகையில் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் ஏரிப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் மதுபாட்டில்கள் வாங்க குடிமகன்கள் பல கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளில் இருந்து டாஸ்மாக் மதுபான கடைகள் அகற்றப்பட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்களின் நிம்மதியை சீர்குலைக்கும் வகையில் வேலூர் மாவட்டத்தில் மொபைல் மதுபாட்டில் விற்பனை அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. ஒரு சிலர் குறிப்பிட்ட இடத்துக்கு மதுபாட்டில்களை அதிகளவில் வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதை மாலைநேரத்தில் பகுதிநேர பணியாக செய்ய தொடங்கிவிட்டார்களாம். மேலும் குடிமகன்கள் செல்போனில் தொடர்பு கொண்டு சொல்லும் மதுபாட்டில் வகைகளை வாங்கி வருகிறார்களாம். இதற்காக ஒவ்வொரு பாட்டிலுக்கும் கூடுதலாக ₹30 முதல் ₹50 வரையும் வசூலிக்கப்படுகிறதாம். இதனால், நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்திருந்த பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். மேலும் டாஸ்மாக் கடைகள் இல்லாத பகுதிகளில் போலி மதுபாட்டில் விற்பனை செய்வதாக குடிமகன்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதேபோல் டாஸ்மாக் மதுபான கடைகளிலும் போலி மதுபாட்டில் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து குடிமகன்கள் கூறுகையில், ‘சமீபமாக தமிழகத்தில் போலி மதுபாட்டில்கள் புழக்கம் அதிகரித்துள்ளது. இதுவரை எந்த டாஸ்மாக் கடையிலும் ரசீது வழங்கப்படவில்லை. இதுதான் போலி மதுபாட்டில்கள் புழக்கத்தில் வருவதற்கு காரணம். டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ₹5ம், பீர் பாட்டில்களுக்கு கூடுதலாக ₹10ம் வசூலிக்கப்படுகிறது. இதுதவிர போக்குவரத்து செலவினம் ஆகியவற்றை கணக்கிட்டு இருக்கும் இடத்திலேயே மதுபாட்டில்களை வாங்கி குடிக்கிறோம்’ என்கின்றனர். இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘மதுபாட்டில்கள் விற்பனையை ஒழுங்குப்படுத்தும் பொறுப்பு அரசுக்குதான் இருக்கிறது. போதைக்கு அடிமையானவர்களை உரிய மருத்துவ சிகிச்சை அளித்து சரிசெய்ய முடியும். அரசு மருத்துவ காப்பீடு திட்டத்தில் போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் பெரும்பாலானோர் போதையில் இருந்து விடுபட்டு மறுவாழ்வு பெற முடியும். மதுபான கடைகளின் எண்ணிக்கைக்கு 4 மடங்கு அதிகமாக போதை மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட வேண்டும்.

டாஸ்மாக் மதுபானக்கடைகளில் ரசீது வழங்குவதோடு மட்டுமல்லாமல், குறிப்பிட்ட வயதினை எட்டியவர்களுக்கு மட்டுமே மது பாட்டில்களை விற்பனை செய்ய வேண்டும். இதேபோல் பல்வேறு வழிகளில் மது விற்பனையை ஒழுங்குப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் இளைஞர்கள் மற்றும் எதிர்கால தலைமுறையினர் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகாமல் தப்பிக்க முடியும்’ என்றனர்.

Tags :
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்