×

திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பெண்கள் தங்களது நகைகளை பாதுகாத்து கொள்ள வேண்டும் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு

திருவண்ணாமலை, டிச.11: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில், பெண்கள் அணிந்து வரும் நகைகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள போலீசார் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான மகா தீபத்திருவிழா நேற்று நடந்தது. இந்நிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் நகைகளை கொள்ளையடிப்பதை தடுக்கும் வகையில், காவல் துறை சார்பில் பெண் பக்தர்களுக்கு போலீசார் தங்களது நகைகளையும் உடமைகளையும் பாதுகாப்பாக பார்த்து கொள்ளும்படி குற்றப்பிரிவு போலீசார் அறிவுரை வழங்கினர். மேலும், விழுப்புரம் மாவட்டம் வளத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா தலைமையிலான பெண் போலீசார், ராஜகோபுரம் அருகே நகைகளை அணிந்து கிரிவலம் வந்த பெண் பக்தர்களை அழைத்து, கழுத்தில் அணிந்திருந்த நகைகளை அவர்களது ஆடையுடன் சேர்த்தும், அவர்கள் அணிந்து வந்த சேலையின் மூலம் கழுத்தில் உள்ள நகைகள் வெளியில் தெரியாதபடி மறைத்தும் பாதுகாப்பாக இருக்கும் வகையில் பாதுகாப்பு பின் பொருத்தி அனுப்பி வைத்தனர். மேலும், கூட்டம் அதிகம் கூடும் பகுதிகளுக்கு வரும் போது, பெண்கள் அதிக நகைகளை அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுரை கூறி, விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

Tags : Thiruvannamalai ,Police Department ,
× RELATED வேலூரில் சிறைக்காவலர்கள் சார்பில் கொரோனா விழிப்புணர்வு பைக் பேரணி