நகராட்சி அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

தாம்பரம்:தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை, போஸ்டல் நகர், நெமிலிச்சேரி, பவானி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், கொசு உற்பத்தி அதிகரித்து வருகிறது. சாலையில் உள்ள கழிவுநீர் அருகில் உள்ள குடியிருப்பு வீடுகளில் புகுந்து தரைதள குடிநீர் தொட்டி மற்றும் வீடுகளில் உள்ள கழிவறையில் சாக்கடை நீர் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டது.

 இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சார்பில், பல்லாவரம் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்ததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் ராதாநகர் - நெமிச்சேரி சாலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிட்லபாக்கம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: