×

பரங்கிமலை- பல்லாவரம் கன்டோன்மென்ட்டுக்கு பிப்ரவரியில் தேர்தல்

ஆலந்தூர்: பரங்கிமலை, பல்லாவரம் கன்டோன்மென்ட் போர்டுக்கான தேர்தல் பிப்ரவரி மாதம் நடக்கிறது. பரங்கிமலை - பல்லாவரம் கன்டோன்மென்ட் போர்டு பகுதி ராணுவ கட்டுபாட்டில் உள்ளது. இங்கு, மொத்தம் 7 வார்டுகள் உள்ளன. இதில், பரங்கிமலை பகுதியில், 4 வார்டுகளும், பல்லாவரம் பகுதியில் 3 வார்டுகளும் உள்ளன.  இங்கு நடக்கும் தேர்தலில் போர்டு தலைவராக ராணுவ அதிகாரியும், துணைத்தலைவர் மற்றும் வார்டு கவுன்சிலர்களை தேர்தல் நடத்தி பொதுமக்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுப்பார்கள்.  
இந்த போர்டுக்கான தேர்தல் கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது.  இதில், போர்டு தலைவராக ராணுவ அதிகாரி பிரிகேடியர்  விக்ரம் சிங் நேரடியாக அறிவிக்கப்பட்டார். துணை தலைவராக 2 வார்டை சேர்ந்த  தேன்ராஜா, 1வது வார்டு ஜெயந்திமாலா, 3வது வார்டு குணசேகரன், 4வது வார்டு லாவண்யா, 5வது வார்டு ஆனந்தகுமார்,  7வது வார்டு சொக்கம்மாள் ஆகிய 6 பேரும் அதிமுக கவுன்சிலராக வெற்றி பெற்றனர். 6வது வார்டில் திமுக சார்பில் விஜயசங்கர்  வெற்றி பெற்றார்.

இவர்களது பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் முடிவடைகிறது. இதனையொட்டி,  பரங்கிமலை - பல்லாவரம் கன்டோன்மென்ட் போர்டுக்கான தேர்தல்  பிப்ரவரி மாதம்  நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது தொடங்கியுள்ளது. மொத்தமுள்ள  7 வார்டுகளில்  2 பெண் வார்டுகள்.  இது ஒவ்வொரு தேர்தலின்போதும் மாற்றி அமைக்கப்படுகிறது.  அதன்படி, 2 பெண் வார்டுகளை தேர்ந்தெடுப்பதற்கான குலுக்கல்  நேற்று மாலை பரங்கிமலை கன்டோன்மென்ட் போர்டு அலுவலகத்தில் நடந்த்து.  இதில், கன்டோன்மென்ட் போர்டு தலைவர் பிரிக்கேடியர் விக்ரம் சிங், கண்டோன்மென்ட் போர்டு நிர்வாக செயல் அதிகாரி ஹர்ஷா, போர்டு  துணை தலைவர் தேன்ராஜா ஆகியோர் முன்னிலையில் இந்த குலுக்கல் நடந்தது.  இதில்,  4வது வார்டு எஸ்சி, எஸ்டி பெண் வார்டாகவும் 6 வது வார்டு பெண் (பொது) வார்டாகவும் அறிவிக்கப்பட்டது.

இதுபற்றி கன்டோன்மென்ட் போர்டு தலைவர் பிரிகேடியர் விக்ரம் சிங் கூறுகையில், ‘கன்டோன்மென்ட் போர்டுக்கான தேர்தல் ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.  பெண்களுக்கான வார்டு ஒதுக்கீடு தற்போது முடிந்துள்ளது. குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்ட வார்டுகள் பற்றிய முடிவுகள் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்’ என்றார்.

Tags : Election ,Parangimalai-Pallavaram Cantonment ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்