விபத்தில் சிக்கிய வாலிபருக்கு அதிநவீன செயற்கை கால்: ராஜிவ்காந்தி மருத்துவமனை சாதனை

சென்னை: விபத்தில் சிக்கி படுகாயமடைந்த வாலிபருக்கு சென்ைன ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிநவீன செயற்கை கால் பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். திருவள்ளூரை சேர்ந்த முனிவேல் என்பவரின் மகன் ஹேம்நாத் (22), கடந்த ஜூலை மாதம் வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதில், அவரது வலது தொடை நசுங்கியது. அவரை மீட்டு சென்னை ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர் சிகிச்சை, கண்காணிப்புக்கு பின் அவருக்கு அதிநவீன செயற்கை கால் பொருத்தி ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் பிளாஸ்டிக் அன்ட் ரீ கன்ஸ்ட்ரக்டிவ் சர்ஜரி துறை டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.  இதுதொடர்பாக சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜெயந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விபத்தில் படுகாயமடைந்த வாலிபருக்கு, டாக்டர்கள் ஜெகன்மோகன், ஸ்ரீதேவி, வெள்ளையங்கிரி ஆகியோர் தலைமையிலான மருத்துவ குழுவினர் வேக்கூம் தெரபி முறையில் நான்கு முறை காயத்தை சுத்தம் செய்வதற்கான சிகிச்சை அளித்தனர்.

அதை தொடர்ந்து 1.77 லட்சம் மதிப்புள்ள அதிநவீன செயற்கை கால் முதல்வரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ் இலவசமாக பொருத்தப்பட்டது.  சாதாரண செயற்கை கால் 10 கிலோ வரை எடை இருக்கும். ஆனால் இந்த அதிநவீன செயற்கை கால், 1.5 கிலோ எடை மட்டுமே கொண்டது. இந்த செயற்கை கால் மூலம் எளிதாக அமர்ந்து, எழுந்து, நடக்க முடியும். தற்போதைய நிலையில் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் நடந்து வருகிறார். அவரால் தற்போது 90 சதவீத பணிகளை செய்ய முடியும். இன்னும் சில மாதங்களுக்கு பின், வாக்கிங் ஸ்டிக் உதவி இல்லாமல் அவர் அனைத்து பணிகளையும் செய்ய முடியும். ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் முழங்காலுக்கு மேல் செயற்கை கால் பொருத்தப்பட்ட முதல் அறுவை சிகிச்சை இது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: