உடைந்த பைப்லைனை சீரமைப்பதில் மெத்தனம் சாலையில் வீணாக வழிந்தோடும் குடிநீர்: அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு

திருவொற்றியூர்: மாதவரம் சாலையில் கடந்த மாதம் உடைந்த பைப்லைனை இதுவரை அதிகாரிகள் சீரமைக்காததால், குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடி வருகிறது. மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து மாதவரம் சாலை வழியாக தபால் பெட்டி, மூலக்கடை, மாத்தூர் மணலி போன்ற பகுதிகளுக்கு மாநகரப் பேருந்து கார், மோட்டார் பைக் என தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், கடந்த மாதம் ராஜாஜி தெரு அருகே மாதவரம் சாலையின் நடுவில் புழல் ஏரியில் இருந்து மணலி குடிநீர் நீரேற்று நிலையத்திற்கு செல்லக்கூடிய ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறியது.  இதுகுறித்து மாதவரம் மண்டல குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் புகார் கொடுத்தனர். ஆனால் குழாயில் ஏற்பட்ட உடைப்பை இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனால் சுமார் 50 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து இங்கு குடிநீர் கசிந்து வருவதால் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய பல்லாயிரம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது.

மேலும் இந்த வழியாக வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் குடிநீர் தேங்கி இருந்த இடத்தில் சாலையும் பழுதாகி குண்டும் குழியுமாக மாறி விட்டது. இதனால் அந்த வழியாக மோட்டார் பைக்கில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர்.  

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடுகிறது. அதுமட்டுமின்றி உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதி வழியாக பைப்லைன் உள்ள மண், சகதி செல்வதால் குடிநீர் மாசடைந்து வருகிறது. மேலும், பைப்லைன் உடைந்த பகுதியில் சாலை குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. கடந்த மாதம் ஏற்பட்ட உடைப்பை இதுவரை அதிகாரிகள் சீரமைக்காமல் மெத்தன போக்குடன் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள் கூறுகையில், “இந்த குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய சுமார் 6 மீட்டர் நீளம் 2 மீட்டர் அகலத்திற்கு சாலையின் நடுவில் பொக்லைன் மூலம் பள்ளம் தோண்டி அதன் பிறகு குழாயில் உள்ள உடைப்பை சரி செய்ய வேண்டும். இதற்காக அனுமதி கேட்டு மாதவரம் போக்குவரத்து துணை ஆணையரிடம் மனு கொடுத்துள்ளோம். ஆனால் சாலையில் பள்ளம் தோன்றுவதற்கு போக்குவரத்து அதிகாரிகள் அனுமதி வழங்காததால் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய முடியாத நிலை உள்ளது. அனுமதி கிடைத்தால் இந்த பிரச்னையை சரி செய்து அந்த இடத்தில் நெடுஞ்சாலைத் துறையின் மூலம் சாலை அமைத்து விடுவோம்” என்றனர்.

Related Stories: