சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்தும் ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் 20ம் தேதி முதல் செயல்படும்: 17 சாலைகளில் 5532 வாகனங்கள் நிறுத்தலாம்

* மெரினா கடற்கரையில் எழிலகம் முதல் கலங்கரை விளக்கம் வரையுள்ள சர்வீஸ் சாலையில் 1345 வாகனங்களை நிறுத்தும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. எனவே 20ம் தேதி முதல் மெரினாவில் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.

சென்னை: சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்துவதற்கு ஏதுவாக ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் வரும் 20ம் தேதி முதல் சென்னையில் செயல்படுத்தப்பட உள்ளது. 17 சாலைகளில் 5532 வாகனங்களை நிறுத்தும் வகையில் இந்த திட்டம் அமல்படுத்தபட உள்ளது.  ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சென்னையில் ரூ.120 கோடி செலவில் பல் அடுக்கு வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட உள்ளன. தி.நகரில் முதல் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் 246 கார்களையும், 562 இரு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம். மேலும் உத்தமர் காந்தி சாலை உள்ளிட்ட இடங்களில் பல அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படுகின்றன.  இதை தவிர்த்து ரூ.2000 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வாகன நிறுத்த திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 35 இடங்களில் வணிக வளாகத்துடன் கூடிய வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படுகின்றன.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்தி செல்வதற்கு ஏதுவாக ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு, அனைத்து சாலைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 471 சாலைகளில் 12,047 கார்களை நிறுத்துவதற்கான இடம் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  இந்நிலையில் இந்த திட்டம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நேற்று முன்தினம் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. இதில் பணிகள் துறை துணை ஆணையர் குமாரவேல் பாண்டியன், துணை ஆணையர்கள் ஆல்பி ஜான், பி.என்.ஸ்ரீதர், ஆகாஷ், சிறப்பு திட்டங்கள் துறை தலைமை பொறியாளர் நந்தக்குமார், ஸ்மார்ட் சிட்டி தலைமை செயல் அதிகாரி ராஜ் செரூபல் ஆகியோர் கலந்து கொண்டனர். முதற்கட்டமாக 17 சாலைகளில் இந்த திட்டத்தை வரும் 20ம் தேதி முதல்  செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை அண்ணாநகர், பெசன்ட் நகர், புரசைவாக்கம், தி.நகர், காதர் நவாஸ்கான் சாலை, வாலாஜா சாலை உள்ளிட்ட 17 சாலைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த இடங்களில் மொத்தம் 5532 கார்களை நிறுத்தும் அளவிற்கான இடங்கள் உள்ளன. இவற்றில் 20 சதவீத இடங்களில் இருசக்கர வாகனங்களுக்கும், 5 சதவீத இடங்கள் மாற்றுத்திறனாளிகளின் வாகனங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை கண்காணிக்க மொத்தம் 460 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.5 கட்டணமாகவும், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.20 கட்டணமாகவும் வசூலிக்கப்படும். கட்டணத்தை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு வழியாகவும் செலுத்தலாம். ஆம்புலனஸ், தீயணைப்பு துறை வாகனங்கள் மற்றும் காவல் துறை ரோந்து வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டது.

தற்போது சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. பொதுமக்கள் GCC Smart Parking என்ற செயலியை சொல்போனில் பதிவிறக்கம் செய்து மொபைல் எண் மற்றும் வாகன எண்ணை பதிவு செய்ய வேண்டும். இதன்பிறகு நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் எத்தனை வாகன நிறுத்துமிடங்கள் காலியாக உள்ளது என்ற தகவல் உங்களுக்கு காட்டப்படும். அதன்படி அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்தை கொள்ளலாம். எனவே பொதுமக்கள் சோதனை செய்து பார்க்கலாம். இதை தொடர்ந்து 2து கட்டமாக 100 இடங்களிலும், 3வது கட்டமாக 120 இடங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தபட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

முக்கிய  சாலைகள்    வாகனங்களின் எண்ணிக்கை

பெசன்ட் நகர்    702

அண்ணா நகர்    1350

தி.நகர்                        635

வாலாஜா சாலை     300

பல்லவன் சாலை    100

Related Stories: