×

சென்னையில் இயக்கப்படும் மாநகர பஸ்களில் நிறுத்தங்களை முன்கூட்டியே அறிவிக்கும் கருவி


சென்னை, டிச. 11: ‘சென்னையில் இயக்கப்படும் மாநகர பஸ்களில் அடுத்தடுத்த நிறுத்தங்களை முன்கூட்டியே பயணிகளுக்கு அறிவிக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது’ என, எம்டிசி மேலான் இயக்குனர் கணேசன் தெரிவித்துள்ளார்.  தமிழக அரசு சார்பில் போக்குவரத்து துறையில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கடந்த 2018-19ம் ஆண்டு போக்குவரத்து துறையின் மானியக் கோரிக்கையில் போக்குவரத்துத்துறை அமைச்சர், மதுரை மாநகர் பேருந்துகளில், பயணிகள் தாம் இறங்கும் இடங்களை முன்கூட்டியே அறிந்துகொள்ள ஏதுவாக, ஒலி அறிவிப்பு மூலம் நிறுத்தங்களை தெரிவிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில், மதுரை மாநகர் பேருந்துகளில் சோதனை அடிப்படையில் புவி திசைச் சுட்டி கருவி மூலம் அடுத்தடுத்த நிறுத்தங்களை முன்கூட்டியே பயணிகளுக்கு அறிவிக்கும் கருவி பொருத்தப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக, நெரிசல் மிக்க நேரங்களில் பயணிகள் எளிதில் அடுத்தடுத்து வரும் நிறுத்தங்களை முன்கூட்டியே அறிந்து கொண்டு எளிதில் இறங்கிட ஏதுவாகவும் உள்ளது.

மதுரையில் பயணிகளிடையே நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ள இந்த வசதியினை, சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் சோதனை அடிப்படையில் செயல்படுத்திட அமைச்சர் உத்தரவிட்டார். அதன்படி, புதிய பேருந்துகள் இயங்கிடும் வழித்தடங்களான, திருவொற்றியூர் - பூந்தமல்லி; கோயம்பேடு - கேளம்பாக்கம்; அண்ணா சதுக்கம் - பூந்தமல்லி ஆகிய வழித்தடங்களில் இயங்கும் மாநகர பேருந்துகளில், முதற்கட்டமாக 75 பேருந்துகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கருவி பயணிகள், அடுத்த நிறுத்தம் வருவதற்கு 100 மீட்டருக்கு முன்னதாக தமிழில் அறிவிப்பினை ஒலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக, பயணிகள் குறிப்பிட்ட தூர இடைவெளிக்கு முன்பாகவே தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு, உரிய நிறுத்தத்தில் இறங்கிட எளிதாக உள்ளதோடு, காலதாமதமும் வெகுவாகக் குறைக்கப்படுகிறது. மேலும், ஒப்பந்ததாரர் வர்த்தக நிறுவனங்களின் விளம்பரங்களையும், பேருந்து நிறுத்த அறிவிப்புகளோடு சேர்த்து அறிவிப்பதன் மூலம் பெறப்படும் வருவாயில், மாநகர் போக்குவரத்துக் கழகத்திற்கு மாதக் கட்டணமாக பேருந்து ஒன்றுக்கு ரூ.1,200 வருவாய் ஈட்டப்படுகிறது. பயணிகளின் வரவேற்பினை பொறுத்து படிப்படியாக சென்னையில் உள்ள அனைத்துப் பேருந்துகளிலும் இந்த வசதி விரிவுப்படுத்தப்படும்.

Tags : Chennai ,
× RELATED சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை பெய்ய தொடங்கியது