×

ஆலந்தூரில் பாதாள சாக்கடைக்காக புதைக்கப்பட்ட கான்கிரீட் குழாய்களை மாற்றி இரும்பு பைப்லைன் அமைக்க வேண்டும்

காஞ்சிபுரம், டிச.11: ஆலந்தூரில் பாதாள சாக்கடை திட்டத்தில் புதைக்கப்பட்டுள்ள பழைய கான்கிரீட் குழாய்கள் அடிக்கடி உடைந்து பள்ளம் ஏற்படுவதால், ஆலந்தூர் பகுதி முழுவதும் 24 கிமீ தூரத்துக்கு அதனை அகற்றி புதிய இரும்பு குழாய்கள் மாற்றி அமைக்க வேண்டும் என சென்னை மெட்ரோ குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் ஹரிஹரன், செயல் இயக்குனர் பிரபுசங்கர் ஆகியோரை ஆலந்தூர் தொகுதி எம்எல்ஏ தா.மோ.அன்பரசன் நேரில் சந்தித்து மனு வழங்கினார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது. ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை மாநகராட்சி பகுதி 12, ஆலந்தூரில் உள்ள 160வது வட்டம் முதல் 167வது வட்டம் வரை உள்ள பகுதிகள் ஆலந்தூர் நகராட்சியாக இருந்தபோது பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட்டு 2005ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்தும்போது 450 மில்லி மீட்டர் முதல் 1100 மில்லி மீட்டர் விட்டம் வரை உள்ள சிமென்ட் கான்கிரீட் குழாய்கள் பூமிக்கு அடியில் சுமார் 4 முதல் 7 மீட்டர் ஆழம் வரை 24 கிமீ நீளத்துக்கு பதிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த சிமென்ட் கான்கீரிட் குழாய்களின் மேற்பகுதியில் அரிப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே கழிவுநீர் குழாய்கள் உடைந்து திடீர் பள்ளம் ஏற்படுகிறது.  இதனால் கழிவுநீர் வீடுகளிலும், சாலைகளிலும் தேங்கி நிற்கிறது. இதையொட்டி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் கடந்த 5 ஆண்டுகளில் இதுவரை 20க்கும் மேற்பட்ட இடங்களில் சிமென்ட் கான்கிரீட் குழாய்கள் உடைந்து வருவதால், அதனை இரும்பு குழாய்களாக மாற்றி அமைத்து சரி செய்யும் பணி நடக்கும்போது அச்சாலைகளை பயன்படுத்தும் பொதுமக்களும், வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி ஆலந்தூர் பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தில் 24 கிமீ நீளத்தில் உள்ள கான்கிரீட் கழிவுநீர் குழாய்கள் முழுவதையும், புதிய இரும்பு குழாய்களாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அந்த மனுவினை பெற்று கொண்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அப்போது ஆலந்தூர் வடக்கு பகுதி செயலாளர் பி.குணாளன், 165வது வட்ட செயலாளர் கே.ஆர்.ஜெகதீஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags : Alandur ,
× RELATED கொச்சி-மங்களூரு இடையே குழாய் மூலம்...