×

உத்திரமேரூர் அருகே பாழடைந்த கிணற்றில் கிடக்கும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு

உத்திரமேரூர், டிச. 11: உத்திரமேரூர் அடுத்த எல்.எண்டத்தூர் கிராமத்தில் மாரியம்மன் தெருவில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக பல ஆண்டுகளுக்கு முன் இந்த தெருவின் மத்தியில் கிணறு அமைக்கப்பட்டது. அதில் தண்ணீர் எடுத்து மக்கள் பயன்படுத்தினர்.இதையடுத்து, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து, அதன்மூலம், குடிநீர் விநியோகம் செய்ததால், கிணற்று நீரை யாரும் பயன்படுத்தவில்லை. இதனால், அந்த கிணறு, பாழடைந்து அதில் உள்ள நீர் மாசடைந்தது. அதில் குப்பை கழிவுகள் சேர்ந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது.மேலும், பொதுமக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், பாட்டில்கள் உள்பட பல்வேறு கழிவுகள் அதில் கொட்டினர். இதனால், கிணற்றில் உள்ள தண்ணீர் கழிவுநீர் போல் காட்சியளிக்கிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்பட பல்வேறு மர்ம காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.

குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள இந்த கிணற்றின் அருகே, அங்குள்ள குழந்தைகள் விளையாடுகின்றனர். இந்த கிணறு திறந்தவெளியில் உள்ளதால், பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இந்த கிணற்றை மூடி வேண்டும் என பலமுறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கமல் உள்ளனர் என குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம், சம்பந்தபட்டதுறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, குடியிருப்புகளுக்கு மத்தியில் திறந்தவெளியில் உள்ள பாழடைந்த கிணற்றை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்.

அசம்பாவிதத்துக்கு  பின் நடவடிக்கையா?
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக பயன்படுத்தாத இந்த கிணற்றை தூர்வாரி சீரமைத்தால், கோடை காலங்களில் குடிநீர் பிரச்னையை ஓரளவுக்கு தடுக்கலாம். அதற்கு மூடி அமைத்தால், அசம்பாவித சம்பவத்தையும் தடுக்கலாம். ஆனால், அசம்பாவிதம் நடந்து, அதை ஊடகங்கள் வெளிப்படுத்திய பின்னரே நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக ேதான்றுகிறது. இதுபோன்று அலட்சியமான அலுவலர்கள் மீது, மாவட்ட நிர்வாகம் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Uthramerur ,
× RELATED கழிவுகளை கொட்டுவதால் மாசுபடும் கண்மாய்