×

நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக நிழற்குடையில் புதிய கல்வெட்டு அமைப்பு மாநகராட்சி அதிகாரிகள் பெயரும் இடம்பிடித்தது

நாகர்கோவில், டிச.11: நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய நிழற்குடையில் இருந்த கல்வெட்டு இரவோடு இரவாக அகற்றப்பட்டு பின்னர் பிளக்ஸ் பேனர் ஒட்டப்பட்டிருந்த நிலையில் மீண்டும் அதிகாரிகள் பெயர்களுடன் புதிய கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள பஸ் நிறுத்தம் இடமாற்றம் செய்யப்பட்டது. கலெக்டர் அலுவலகத்தில் பிரதான நுழைவு வாயில் அருகே இருந்த பழமை வாய்ந்த காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டு 5 லட்சம் செலவில் புதிய பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டது. இதனையொட்டி கல்வெட்டு ஒன்றும் அந்த இடத்தில் அமைக்கப்பட்டது. அதில் நாகர்கோவில் மாநகராட்சி 100 ஆண்டு நினைவு பயணிகள் நிழற்குடை எனவும், துவக்க தேதி 1.1.2020 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், பொறியாளர் பாலசுப்பிரமணியன், சுஜின் ஆகியோரது பெயர்கள் மட்டும் இடம் பெற்றிருந்தது. அடுத்த ஆண்டின் தேதியில் கல்வெட்டு வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில் அந்த கல்வெட்டு திடீரென்று இரவோடு இரவாக திடீரென்று பெயர்த்து அகற்றப்பட்டது. மேலும் கல்வெட்டு இருந்த இடத்தில் புதிதாக பிளக்ஸ் பேனர் ஒன்றை அதிகாரிகள் ஒட்டி வைத்தனர்.

அதில், ‘நாகர்கோவில் மாநகராட்சி நூற்றாண்டுவிழா நினைவு பேருந்து நிறுத்தம். நாகர்கோவில் நகராட்சி திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 1919ம் ஆண்டு நகராட்சியாக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. 1956ம் ஆண்டு தாய் தமிழ்நாட்டுடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைக்கப்பட்டபோது நாகர்கோவில் நகராட்சி தமிழக அரசின் நகராட்சி நிர்வாக துறையின் கீழ் செயல்பட தொடங்கியது. 1969ல் பொன்விழா ஆண்டு கொண்டாடப்பட்டது. பின்னர் 1988ம் ஆண்டு சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்தநிலையில் நூற்றாண்டுவிழா கண்ட நகராட்சி 2019ம் ஆண்டு மார்ச் முதல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர், பொறியாளர் என்று அதிகாரிகளின் பெயர்களின்றி பதவிகள் மட்டும் குறிப்பிடப்பட்டு நகராட்சியின் வரலாறு சுருக்கமாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த பிளக்ஸ் பேனரில் இருந்த தகவல்கள் கல்வெட்டாக மாற்றப்பட்டு நேற்று முன்தினம் இரவு நிழற்குடையில் மீண்டும் பதிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர், பொறியாளருக்கு பொறுப்புகள் மட்டுமே பிளக்சில் இடம்பெற்றிருந்த நிலையில் ஆணையர் சரவணகுமார், பொறியாளர் பாலசுப்பிரமணியன் என்ற பெயர்கள் கூடுதலாக கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. கலெக்டர் பெயர், மற்றுமொரு பொறியாளர் பெயர், ரூ.5 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டது போன்ற விபரங்கள் தற்போது கல்வெட்டில் இடம் பெறவில்லை. பஸ் நிலையத்தில் தினசரி ஒவ்வொருவிதத்தில் கல்வெட்டு அமைக்கப்பட்டு வருவது பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : office ,Collector ,Nagercoil ,Municipal Officers ,
× RELATED ஒட்டன்சத்திரம் அருகே 14ம் நூற்றாண்டு காலத்து கல்வெட்டு கண்டுபிடிப்பு