×

முகவரி கேட்பது போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் செயின் பறிப்பு: வாலிபர் அதிரடி கைது

காலாப்பட்டு:   கோட்டக்குப்பத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் முகவரி கேட்பது போல் நடித்து செயினை பறித்துச்சென்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து திருட்டுநகை பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் ஜமீத் நகரை சேர்ந்தவர் முகம்மது அஜி (32). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் சொந்த ஊர் வந்து விட்டார். இந்நிலையில் கடந்த 3ம் தேதி முகம்மது அஜி வெளியே சென்றுவிட்ட நிலையில் அவரது மனைவி சகாமா (28) மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். மதிய நேரத்தில் மர்ம நபர் ஒருவர் அங்கு வந்தார். அவர் முகவரி கேட்பதுபோல் வீட்டின் உள்ளே நுழைந்துள்ளார். பேசிக்கொண்டிருந்த போதே அந்த நபர், சகாமா கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச்செயினை கண்ணிமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு தப்பியோடினார்.

அதிர்ச்சி அடைந்த அந்தப்பெண் திருடன் திருடன் என சத்தம் போட்டார். சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து மாயமாகி விட்டார். இதுகுறித்து சகாமா கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து செயின் பறித்துச்சென்ற மர்ம நபரை தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் கோட்டக்குப்பம் இசிஆர் சாலை ரவுண்டானா அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பேருந்துக்காக காத்து நின்ற நபர் ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் அருகில் சென்றபோது அந்த நபர் தப்பியோட முயன்றார். உடனடியாக அவரைப்பிடித்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். தொடர்ந்து அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியபோது அவர் பெரிய கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த ரகு மகன் சரத் என்ற சத்தியராஜ் (20) என்பது தெரியவந்தது. அவரை சோதனை போட்டபோது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ஒன்றரை பவுன் செயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சத்தியராஜை கைது செய்த போலீசார் வழக்குப்பதிந்தனர். திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags :
× RELATED திருச்சி தீரன்நகரில் பெண்ணிடம் 5 பவுன் செயின் பறிப்பு