×

மரக்காணம் அருகே மின்சாரம் தாக்கி எலக்ட்ரீசியன் சாவு

மரக்காணம்: மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடற்கரை ஓரம் 50க்கும் மேற்பட்ட இறால் குஞ்சு பொறிப்பக தொழிற்சாலைகள் உள்ளது. இந்த தொழிற்சாலைகளில் ஆந்திரா, ஒடிசா, பீகார் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த கூலி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மரக்காணம் அருகே அனுமந்தை மீனவர் பகுதியில் கடற்கரை ஓரம் தனியாருக்கு சொந்தமான இறால் குஞ்சு பொறிப்பக தொழிற்சாலை உள்ளது. இந்த இறால் குஞ்சு பொறிப்பக தொழிற்சாலையில் திருவண்ணாமலை மாவட்டம் திரும்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த மதுரைமுத்து மகன் மதன்(19) என்பவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்துள்ளார்.

இவர் நேற்று முன்தினம் இறால் குஞ்சு பொறிப்பக தொழிற்சாலையில் இருந்த ஒரு மின் மோட்டாரை இயக்கி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட மதனை அருகில் இருந்தவர்கள் மீட்டு கனக செட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து அவரது தந்தை மதுரைமுத்து மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   

Tags : Electrician ,
× RELATED செல்போன், மின்சாரம் இல்லாமல் வாழும் 48 வயது நபர்...