×

விவசாயிகள் கவலை வெலிங்டன் நீர்த்தேக்க கரைப்பகுதியில் கசிவு

திட்டக்குடி: கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா கீழ்செருவாயில் அமைந்துள்ளது வெலிங்டன் ஏரி. மிகப் பெரிய ஏரியான  இதன் மூலம் இப்பகுதியை சேர்ந்த சுமார் 67 கிராமங்களில் உள்ள 24 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரி 1917ல் தொடங்கி 1922ல் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டது. இந்த ஏரியின் நீர்பிடிப்பு பரப்பு 16.6 சதுர கிலோ மீட்டர். முழு கொள்ளளவு 2580 மில்லியன் கனஅடி. நீர் தேக்கத்தின் நீர் மட்ட உயரம் 29.72 அடி. இவற்றின் பாசன தலைப்பு மதகுகள் மூலம் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தொழுதூரில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வெள்ளாற்றில் மேல் அணை ஒன்று கட்டப்பட்டு, அதிலிருந்து ஒரு தனி கால்வாய் மூலம் தண்ணீர் வெலிங்டன் ஏரிக்கு கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2010ம் ஆண்டு கரையின் ஒருபகுதி முழுமையாக சேதமடைந்ததால் பொதுப்பணித்துறையினர் கரையில் 1600 மீட்டர் முதல் 2400 மீட்டர் வரை உள்ள சேதமடைந்திருந்த கரைபகுதியை 8 கோடி ரூபாயில் சீரமைத்தனர். தொடர் நடவடிக்கையாக, 2017ம் ஆண்டில் சுமார் 6 கோடி ரூபாயில் கரை சீரமைக்கப்பட்டது. இந்நிலையில், ஏரியின் கரையும் புதியதாக போடப்பட்டு கரைபகுதியும் இணையும் இடத்தில் தொடர்மழை காரணமாக சுமார் 1 மீட்டர் ஆழத்திற்கு முக்கால் மீட்டர் நீளம் வரை விரிசல் ஏற்பட்டு அமுங்கியது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுத்த பல்வேறு நடவடிக்கை காரணமாக விரிசல் சரிசெய்யப்பட்டது. தொடர்ந்து உயர் அதிகாரிகளின் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக முழு கொள்ளளவு தண்ணீர் பிடிக்கப்பட்டது. தற்போது வடகிழக்கு பருவமழைகாரணமாக சேலம், ஆத்தூர் பகுதியில் கனமழையால் வெள்ளாற்றில் வந்த மழைநீரை வெள்ளாற்றில் 4500 கனஅடியும், வெலிங்டன் ஏரிக்கு 3000 கன அடியும் பொதுப்
பணித்துறையினர் திறந்து விட்டனர். தற்போது வெலிங்டன் ஏரியின் நீர்பிடிப்பு 15 அடியாக உள்ளது. தண்ணீர் பிடிக்கப்பட்டதை அறிந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில், தற்போது கரை பகுதியில் மழைநீர் வெளியேறும் வகையில் கரையின் பல்வேறு பகுதிகளில் சிமெண்டால் மழை நீர் செல்லும் பாதைகள் அமைக்கப்பட்டு மழை நீர் அகற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள மழை நீர் செல்லும் 18வது சிமெண்ட் பாதையில் தரைப்பகுதியில் ஏரிக்குள் தேக்கி வைக்கப்பட்டுள்ள நீர் கசிந்து வெளியேறுகிறது. இதை அறிந்து விவசாயிகள் அச்சமடைந்தனர்.

இந்நிலையில், பொதுப்பணி துறையின் கோட்ட செயற்பொறியாளர் மணிமோகன், நீர்தேக்கத்தில் நீர் கசிந்து வெளியேறும் இடத்தை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறும்போது, பொதுவாக ஏரியில் தண்ணீர் பிடிக்கும் போது இத்தகைய கசிவுகள் வழக்கமான ஒன்று தான். இருப்பினும் நாங்கள் அதை கண்காணித்து வருகிறோம். இத்தகைய கசிவினால் எந்த பாதிப்பும் வராத வகையில்தான் திட்டமிடப்பட்டு கரைகள் அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தீவிர கண்காணிப்பு மற்றும் தொடர் நடவடிக்கைகள் காரணமாக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் வராது. நீர்கசிவு அதிகமானால் மேல் மட்ட அதிகாரிகளுடன் கலந்து பேசி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : Wellington Reservoir ,
× RELATED பொன்னமராவதி பகுதியில் தொடர் மழையால்...