போட்டோ ஸ்டூடியோவை உடைத்து 1 லட்சம் பணம், கேமரா கொள்ளை

வேப்பூர்: வேப்பூர் அருகே நள்ளிரவில் போட்டோ ஸ்டூடியோவை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள பணம், கேமரா, லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் அடுத்தடுத்து 2 கடைகளை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வியாபாரிகள் கலக்கத்தில் உள்ளனர். வேப்பூர் அடுத்த சேப்பாக்கத்தில் நல்லூர் செல்லும் சாலையில் வேப்பூரை சேர்ந்த ராஜா (25), அவரது நண்பர் விஜய் (29) ஆகிய 2 பேரும் கடந்த 4 மாதங்களுக்கு போட்டோ ஸ்டூடியோ தொடங்கி நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம்
இரவு இருவரும் வழக்கம்போல் ஸ்டூடியோவை பூட்டிவிட்டு தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். நேற்று அதிகாலை 5 மணியளவில் ஸ்டூடியோவின் 3 பூட்டுகளில் இரண்டு பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன. மேலும் நடுப்பகுதியில் உள்ள பூட்டை கடப்பாரையால் நெம்பி தரைப்பகுதியை உடைத்து ஷட்டர் திறக்கப்பட்டு கிடந்தது. இதுபற்றி அருகில் உள்ள ஓட்டல் உரிமையாளர், ஸ்டூடியோ உரிமையாளர்களுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து ராஜா மற்றும் விஜய் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். தங்கள் ஸ்டூடியோ உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்ததன் பேரில் வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், ஸ்டில் கேமரா, ஒரு லேப்டாப் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும். நள்ளிரவில் மர்ம நபர்கள் போட்டோ ஸ்டூடியோ ஷட்டரை உடைத்து உள்ளே நுழைந்து பணம், பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளதும் தெரியவந்தது. மேலும் கொள்ளையர்கள் அருகில் ஜெனரல் ஸ்டோர் மற்றும் காய்கறி கடையிலும் கொள்ளையடிக்க முயன்றுள்ளதும் தெரியவந்தது. கடலூரில் இருந்து கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்களால் அப்பகுதி வியாபாரிகள் அச்சத்தில் உள்ளனர்.

Tags :
× RELATED கோயில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் பணம் கொள்ளை