×

திருச்சுழி அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சென்ற அதிகாரிகள் வாகனம் சிறைப்பிடிப்பு

திருச்சுழி, டிச. 10:   திருச்சுழி அருகே ஆக்கிரமித்துள்ள வரத்து கால்வாயை அகற்றாமல் சென்ற தாசில்தார் வாகனத்தை  சிறைபிடித்த கிராமத்தினர். திருச்சுழி அருகே உள்ள மைலி கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பம் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் அருகே பாசன வசதி பெறும் வகையில் மைலி மற்றும் நத்தக்குளம் கண்மாய் உள்ளது. இக்கண்மாய்கள் மூலம் சுமார் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் இக்கண்மாய் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர். இடையாங்குளம் கண்மாய் நிரம்பிய பின்பு சாலையோர ஓடை வழியாக மைலி கண்மாய்க்கு நீரை கொண்டு  விவசாயம் செய்து வந்தனர். தற்போது அக்கண்மாய் நீரை அவ்வழியாக கொண்டு செல்ல இடையங்குளத்தை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மைலி கிராமத்தினர் தங்களுக்கு வரைபடத்தில் உள்ள ஓடையை இடையங்குளத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அதனை மீட்டு தரும்படி காரியபட்டி தாசில்தாரிடம் புகார் அளித்தனர்.

ஆக்கிரமிப்பை அகற்றுவதாக பலமுறை தாசில்தார் கூறிய பின்பு அகற்றாததால் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தங்களது ஆதார் மற்றும் குடும்ப அட்டையை ஒப்படைக்க சென்றனர். அப்போது கோட்டாட்சியர் நேற்று ஆக்கிரமித்துள்ள ஓடையை அகற்றி தருவதாக வாக்குறுதி அளித்ததன் பேரில் அனைவரும் திரும்பி சென்றனர். நேற்று ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்றபோது, திருச்சுழி, காரியாபட்டி தாசில்தார்களை ஓடை பகுதி அகற்றுவதற்கு அளவிட இடையாங்குளம் கிராமத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்பு திருச்சுழி டிஎஸ்பி சசிதர் பொதுமக்களிடம் பேசியபோது, கிராமத்தினர் டிஎஸ்பியிடம் ஓடை பகுதியை தாங்களாகவே அகற்றுவதற்கு காலக்கெடு கொடுக்குமாறு கேட்டுக்கொண்டதன் பேரில் நேற்று அகற்றாமல் மைலி கிராமத்தை கடந்து சென்றனர். அப்போது மைலி கிராமத்தினர் தாசில்தாரை சிறைபிடித்தனர்.

இதனால் அக்கிராமத்தில் பதற்றமும், பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் பிரச்சனை ஏற்படாமல் இருக்க 50க்கும் மேற்பட்ட போலீசார் மைலி கிராமத்தில் குவிக்கப்பட்டனர். பின்பு அதிகாரிகள் இன்று உறுதியாக ஓடை பகுதியை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம் என கூறிய பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Trichy ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...