×

அருப்புக்கோட்டை பெரிய கண்மாயில் முதுமக்கள் தாழி ஆய்வு

அருப்புக்கோட்டை, டிச.10:விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தெற்குத்தெருவைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் மதுரையில் உள்ள சட்டக்கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர் விடுமுறை நாட்களில் மரக்கன்றுகள் நடும் பணியை செய்து வருகிறார். கடந்த 7ம் தேதி அருப்புக்கோட்டை பெரிய கண்மாய் பகுதியில் மரக்கன்றுகள் நட குழி தோண்டியபோது ஒரு பெரிய பானை வெளிப்பட்டது. உடனே வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். வருவாய் துறையினர் விருதுநகர் அருங்காட்சியக காப்பாட்சியர்  கிருஷ்ணம்மாளிடம் தகவல் கூறியுள்ளனர். இதையடுத்து அருங்காட்சியக காப்பாட்சியர் கிருஷ்ணம்மாள் பெரிய கண்மாய் பகுதியில் ஆய்வு செய்தார். அப்பகுதியில் பானைகள் அதிகளவு புதைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தார். இது முதுமக்கள் தாழி தான். இது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால நாகரிகத்தை சார்ந்தது. அந்த காலத்தில் இறந்தவர்களை இதுபோன்ற மண்பாண்டங்களில் வைத்து ஆற்றங்கரை, வாய்க்கால் பகுதியில் புதைப்பர். அதுபோல் தான் இதுவும் உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், ஆதிச்சநல்லூர் பகுதியில் 114 ஏக்கரில் அரை அடிக்கு ஒரு முதுமக்கள் தாழி கிடைக்கும். கீழடியில் முதுமக்கள் தாழி மூடியோடு கிடைத்துள்ளது. இந்த தாழியில் மனித எலும்புகளும் கிடைத்திருக்கிறது. கருப்பு, சிவப்பு மண்பாண்டங்கள் கிடைத்திருக்கிறது. அருங்காட்சியக இயக்குநருக்கு தகவல் தெரிவித்தேன்.  அதன்பிறகு தொல்லியல்துறை ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அவர்கள் ஆய்வு செய்த பின்பு முக்கிய வரலாற்று தகவல்கள் இந்த பகுதியில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கிறேன் என்றார். அப்போது மண்டல துணை வட்டாட்சியர் ராஜீவ்காந்தி மற்றும் கிராம அலுவலர் உடன் இருந்தனர்.

Tags : Aruppukkottai ,
× RELATED சகோதரிகளை கடத்தி கூட்டு பலாத்காரம்