×

கம்பம் பள்ளத்தாக்கில் விலை இருந்தும் விளைச்சல் இல்லை வெங்காய விவசாயிகள் கவலை

கம்பம், டிச. 10: வெங்காயத்தின் விலை உச்சத்தில் உள்ளபோதும், கம்பம் பகுதியில் விளைச்சல் குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கம்பம் பள்ளத்தாக்கு விவசாய நிலப்பகுதிகளான அணைப்பட்டி, சுருளிப்பட்டி, கூடலூர், காஞ்சிமரத்துறை, வெட்டுக்காடு, பளியன்குடி பகுதிகளில் விவசாயிகள் வெங்காயம் சாகுபடி செய்து உள்ளனர். குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் கிணறு மற்றும் சொட்டு நீர் பாசனம் மூலம் வெங்காய சாகுபடி செய்து வருகின்றனர். காலம் தவறிய மழை, பனிப்பொழிவால் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு வெங்காய விளைச்சல் மிகக்குறைந்து உள்ளது.

தற்போது அணைப்பட்டி பகுதியில் வெங்காய அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. குறைந்த அளவே விளைச்சல் உள்ளதால் வெங்காயம் அதிக விலை விற்ற போதும் பலனில்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மழை, பனிப்பொழிவால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் தற்போது வெங்காய சாகுபடி பரப்பளவு குறைந்து உள்ளது. வெங்காய சாகுபடிக்கு ஒரு ஏக்கருக்கு 250 கிராம் விதை தேவைப்படுகிறது. நடவு செய்து நாளில் இருந்து முன்று மாதத்திற்குள் வெங்காயம் அறுவடை தொடங்கிவிடும். தற்போது வெங்காய அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. விளைச்சல் கடந்த ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு மிகவும் குறைந்து உள்ளது.

சாதாரணமாக ஒரு குழிக்கு 700 முதல் 800 எடைவரை (7 முதல் 8 டன்) விளைச்சல் வரவேண்டிய வெங்காயம் இம்முறை 250 முதல் 300 எடைவரை (2.5 முதல் 3டன்) மட்டுமே வந்துள்ளது. இதில் சில விவசாயிகளுக்கு ஒருடன் அளவே வெங்காயம் விளைச்சலாகி உள்ளது. வெங்காய விலை உச்சத்தை தொட்டாலும் விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் 1கிலோ வெங்காயம் ரூ.80க்கு கொள்முதல் செய்து, கிலோ ரூ120 முதல் ரூ140 வரை விற்பனை செய்கின்றனர். விளைச்சல் மூன்றில் ஒருபங்காக குறைந்ததால் வெங்காய விவசாயத்தில் விவசாயிகளுக்கு லாபமில்லை. வியாபாரிகளுக்குத்தான் அதிக லாபம்’’ என்றனர்.

Tags : Onion farmers ,Pole Valley ,
× RELATED கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில்...