×

துப்புரவு பணியாளர்களுக்கு 6 மாதத்திற்கு ஒருமுறை முழு மருத்துவ பரிசோதனை உள்ளாட்சிகளுக்கு உத்தரவு

தேனி, டிச. 10: கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள் அத்தனை பேருக்கும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை முழு அளவிலான மருத்துவ பரிசோதனை நடத்த அரசு உள்ளாட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாக அதிகாரிகள் கூறியதாவது: கிராம ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் துப்புரவு பணியாளர்கள் எக்காரணம் கொண்டும் சீருடை அணியாமலும், கைகளுக்கு கிளவுஸ் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அணியாமலும் துப்புரவு பணிகளை செய்யக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் குப்பைகளைக் கொட்டி மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரிக்கும் பணியாளர்களும் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி இந்த பணிகளில் ஈடுபடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் அனைத்து உள்ளாட்சிகளிலும் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு கண்டிப்பாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முழு அளவிலான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும். தொடர் சிகிச்சை தேவைப்படும் பணியாளர்களுக்கு அரசு காப்பீடு திட்ட செலவில் இலவசமாகவே தேவையான முழு சிகிச்சையும் வழங்கவும் அரசு அறிவுறுத்தி உள்ளது.
தற்போது உள்ளாட்சி அறிவிப்பு வெளியானதால் கிராம ஊராட்சிகளில் பரிசோதனை திட்டம் தேர்தல் முடிந்த பின்னர் செயல்படுத்தப்படும். நகர்ப்புற உள்ளாட்சிகளில் விரைவில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வர உள்ளது. இவ்வாறு கூறினர்.

Tags :
× RELATED கஞ்சாவுடன் சுற்றி திரிந்த வாலிபர் கைது